Tuesday, 2 October 2012

பிரதமர் ஐயாவுக்கு காந்தி ஜெயந்தி வாழ்த்துகள்


காந்தி, காமராஜர், சுபாஷ், பகத், பாரதி என வீரர்கள் வாழ்ந்த காலத்தில் தகவல் தொழில்நுட்பம் உச்சத்தில் இல்லை. ஆனால் உணர்ச்சி கொழுந்துவிட்டு எரிந்தது. இன்று தொழில்நுட்பம் உச்சத்தில் உள்ளது ஆனால் உண்மையான போராட்ட வீரர்கள் யாரும் இல்லை. புரட்சி எனும் உணர்ச்சி சுபாஷுடன் மர்மமாய் மறைந்துவிட்டதா இல்லை கல்லறையில் காந்தியுடனே புதைக்கப்பட்டு விட்டதா...,  என்னிடம் பதில் இல்லை.

இரோம் ஷர்மிளாவின் 12 ஆண்டு அஹிம்சை போராட்டம், கவனத்தில் கொள்ள மறுக்கப்படும் கிழக்கு இந்தியாவின் ஓலம், காஷ்மீரில் அரங்கேறும் கண்மூடித்தனமான வன்முறை, தெலுங்கானா, ஜெய்தாப்பூர், இப்போது கூடங்குளம் என ஆங்காங்கே வெடிக்கும் மக்கள் போராட்டம், 65 ஆண்டுகளாக இன்னமும் முன்னேற்றம் காணாத தலித்துகளின் வாழ்க்கைத் தரம், பழங்குடியின மக்களின் விசும்பல்... இவை எல்லாமே ஜனநாயகத்தின் காலரைப் பிடிப்பவை தான். ஜவஹர்லால் நேரு முதல் மன்மோகன் சிங் வரை பார்த்த மூத்த பத்திரைக்கையாளர் திரு.குல்தீப் நய்யாரின் வார்த்தைகள்.

இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு தீர்க்க வேண்டிய அரசோ அடக்குமுறையை கையாண்டு எங்களை அடக்குவதிலியே குறியாய் இருக்கிறது. மன்மோகனின் அரசியல் சூத்திரமே தனி, ஒரு பிரச்சனை கிளம்பினால் மௌணம் சாதித்து அதை கிடப்பில் போடுவது, அதையும் மீறி பிரச்சனை தலையெடுத்தால் அரசு நடவடிக்கை எடுக்கும் என அறிவிப்பு, அதற்கு மேலும் பிரச்சனை அடங்கவில்லையா இருக்கவே இருக்கிறது வால்மார்ட்டும், பெட்ரோல் டீசல் விலையேற்றமும் கிளப்பிவிடுங்கள் அதை மற்றவை தானாய் அடங்கிவிடும்.

மன்மோகனின் சதுரங்க ஆட்டத்தின் வெற்றிக்கு துணையாக இருப்பதே எதிர்க்கட்சிகள் தான். எதிர்ப்பை வளுவாய் வைக்காததே மன்மோகனின் தொடர் நகர்த்தலுக்கான ஆதரவை வளுவாய் தருகிறது, கூட்டணி கட்சிகள் கூட இப்படி ஒரு ஆதரவு தருவதில்லை. கருப்பு பண விவகாரமும், விலைவாசி ஏற்றமும் பாராளுமன்றத்தை முடுக்கவதற்காக மட்டுமே பயன்ப்படுத்துகிறது. அதை மக்கள் போராட்டமாக மாற்றி, மக்களை போராட வைப்பதும் இல்லை, தப்பித்தவறி மக்களே போராடினாலும் அந்த போராட்டத்திற்கு ஆதரவு தந்து வளு சேர்ப்பதும் இல்லை. செயல்படாத அரசு மட்டும் இல்லை, செயல்படாத எதிர்க்கட்சிகளும் இருப்பதால் தான் இந்த நிலைமை.

கூட்டணி கட்சிகளை பற்றிய என் சிறிய கருத்து அவர்கள் பச்சோந்திகள். அதுவும் தமிழக கட்சிகள் ஒப்பீடு செய்வதற்கு கூட முடியாத தரம் கெட்ட நிலைமையில் இருக்கிறது. கூட்டணியில் இருந்து கொண்டே கடையடைப்புக்கு ஆதரவு தெரிவித்தது அவர்களின் தரத்திற்கான அக்மார்க் சான்று. தாமதமாய் சொரணை வந்தாலும் மம்தா எவ்வளவோ பரவாயில்லை. முலாயம் சிங்கிற்கும், கருணாநிதிக்கும் என்று வரும் என்று தான் தெரியவில்லை. அவர்களுக்கு வரப்போவதும் இல்லை.

மன்மோகன் அப்பிடி என்ன சார் பண்ணிட்டார்னு கேக்குறீங்களா... அவர் எதுவுமே பண்ண மாட்டேங்குறார் சார் அதான் பிரச்சனையே...
மத்திய அரசு செயல்படுகிறதா என்றே தெரியவில்லை என ஒரு நீதிபதியும், மத்திய அரசை நினைத்தாலே BP ஏறுகிறது என மற்றொரு நீதிபதியும் நீதிமன்றத்திலேயே உரைக்கும் அளவில் உள்ளது அவரின் செயல்பாடு. மன்மோகனும், சிதம்பரமும் நாங்கள் நல்லவர்கள் என்று சொன்ன போதெல்லாம் நான் நம்பவில்லை, நிலக்கரி ஊழல் விவகாரத்தை எதிர்க்க திராணியில்லாமல் வால்மார்ட்டை கிளப்பிவிட்ட போதுதான் அவர் நல்லவர் என நம்ப துணிந்தேன். நல்லவர் தான் நம்புங்க அவரின் சாதனைகளில் சில இதோ...

உலகில் இதுவரை தொடமுடியாத உச்சம் 76000 கோடி நிலக்கரி ஊழல். ராசா கொஞ்சம் கம்மினு கருணாநிதி பெருமை பட்டுக்கொள்ளலாம்.

சுகாதார குறைப்பாட்டால் இறக்கும் குழந்தைகள் இந்தியாவில் தான் அதிகம் என ஐ.நாவின் கண்டணம். உகாண்டாவில் கூட நம்மை விட கம்மியாம்.

வால்மார்ட் தான் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு சரி என்பது தலைசிறந்த இரு பொருளாதார நிபுணர்களின் கருத்து. வால்மார்ட் அல்ல அது வாலில் தீ என்பது கமலஹாசனின் கருத்து. எது சரியென்று புரியவில்லையா... 200 வருடம் பின்னோக்கி சென்று கிழக்கிந்திய கம்பெனியின் வரலாற்றை திருப்பி பாருங்கள் புரியும்...

ஈழத்தமிழர்களின் கொலைக்கு உடந்தை மற்றும் தமிழர்களுக்கு செய்த, செய்யும் துரோகம்.

70% சதவீத மக்களுக்கு கழிவறை இல்லை. திட்ட கமிசன் குழு தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவின் கழிவறையை சரிசெய்ய 70 கோடி செலவு செய்துள்ளது மத்திய அரசு.

இது பரவாயில்லை, 1040 கோடி கடந்த ஆண்டு சோனியாவின் உடல் நலத்திற்கு செலவு செய்துள்ளது. யார் வீட்டு காச யாருங்க செலவு பண்றது. சோனியா காந்தி என்ன இந்நாட்டின் பிரதமரா, இல்லை குடியரசு தலைவரா. ஒரு அரசியல் கட்சியின் தலைவர் தானே, அவரும் எங்களுக்கு சமம் தானே அப்போ எங்களுக்கும் அந்தளவிற்கு தொகை ஒதுக்குமா மத்திய அரசு. ஒதுக்கியிருந்தா ஏங்க ஐ.நா கண்டிக்குது. சரி சோனியாக்காக தான் நீங்க பிரதமரா இருக்கீங்கனா எதுக்குங்க இந்த பதவி தூக்கி எறிஞ்சுட்டு போங்க சார். மானம் உள்ளவன தெய்வமா பாப்போம் நாங்க.

காஷ்மீர் பிரச்சனைய விட, காவிரி பிரச்சனை பெரிதாகிவிடும் போல...
நமக்கு இதெல்லாம் தேவையா... வாங்க K.F.C ல போயி பக்கெட் சிக்கென் சாப்பிடுவோம். இல்லன்னா வாங்க காந்தி ஜெயந்தி அன்னைக்கு நித்தியானந்தா பேட்டியாம் அதையாவது பாப்போம்.

 என்னங்க காந்தி ஐயா பண்றது, உங்கள பத்தி எழுதலாம்னு தான் ஆரம்பிச்சேன். ஆனா எங்களுக்கு நீங்க எவ்ளோ தேவை என்பதை பத்தி எழுத வேண்டியதா போச்சு. சுதந்திரம் வாங்கி தந்த கட்சி என்னும் போர்வையை இன்னும் உபயோகிக்க முடியாது. அந்த கட்சிக்கு எதிரான சுதந்திர போராட்டம் விரைவில் எழும் இந்தியாவின் மிக மோசமான பிரதமர் அவர்களே... 

4 comments:

  1. உணர்ச்சிபூர்வமான பதிவு நண்பா.. உண்மை நிலையை அப்படியே சொல்லி இருக்கீங்க, உங்க தைரியத்துக்கு பாராட்டுக்கள்.. ஆனா இதுல இருக்கற தகவல்கள் நிறைய எனக்கு தெரியாதது தான், பகிர்ந்ததற்கு நன்றி
    இப்படிக்கு ப்ரி.. :)

    ReplyDelete
  2. முதலில் உங்க தைரியத்துக்கு பாராட்டுகள் நண்பா. அருமையான படைப்பு

    ReplyDelete