கால்கள் நோக காத்துகிடந்தேன்,
காலை நண்பகலாய் ஆன போதும்
காத்திருந்த பேருந்து வரவில்லை.
அங்கு இருந்ததிலேயே
நீ தான் அழகு என்பதால்
உன்னை ரசித்திருந்தேன்.
அது பொருக்கவில்லை
எங்கிருந்தோ வந்துவிட்டது பேருந்து.
எனக்கு ஏறவே மனமில்லை,
ஏதோ நீ ஏறுகிறாய்
என்பதால் நானும் ஏறினேன்.
“படியில நிக்காத...”
“வழி விடும்மா...”
“எங்க போறிங்க...”
இந்த சத்தமெல்லாம்
எங்கிருந்து கேட்கின்றன...,
பேருந்தில் நீயும் நானும் மட்டும் தானே
இருக்கிறோம்.
அட.., பேருந்து ஜன்னல் கம்பியில்
வழிந்து நிற்கும் நீர்த்துளி கூட
இன்று அழகாய் தெரிகிறதே...
ஒருகணம் நீ துடைத்து எறிந்த
வியர்வை துளியோ என நினைத்துவிட்டேன்.
வேகமாய் செல்வது போல்
பாவனை காட்டி
மெதுவாய் செல்லும் பேருந்தை போல்
எத்தனை அழகாய் நடிக்கிறாய்...,
என்னை பார்த்தும் பார்க்காதது போல...
திருட்டுத்தனமாய் என்னை ரசிப்பதில்
கொள்ளை பிரியம் உனக்கு...
எந்த குழந்தைக்கு தான் பிடிக்காது
ஜன்னல் ஓர சீட்டும்,
பின்னால் செல்லும் மரங்களும்...
வழக்கம் போல இன்றும்
உரைத்துவிட்டேன் என் காதலை,
எப்போது கேட்டாலும் சில்லறை இல்லை
என சொல்லும் நடத்துனர் போலவே
இன்றும் மறுத்து செல்கிறாய் நீ...
No comments:
Post a Comment