அறிவிற்கான வழித்தடம்.
தலைவர்களின்
விதைப்பிடம்.
தீண்டாமையை தொட்டொழித்த
திருத்தலம்.
சாதியை புறம் தள்ளிய
போர்க்களம்.
ஆத்திகத்தையும்
சொல்லித்தந்த பகுத்தறிவு களம்.
நல்லதொரு விஜயதசமி
நாளில்
நண்பர்களுக்கு மிட்டாய்
வழங்கி தொடங்கப்பட்டது
எனக்கும்
கரும்பலகைக்குமான நட்பு.
அ – அம்மா, அன்பழகி
என என் சின்ன
கரும்பலகையில்
எழுதி நீட்டினேன்.
உள்ளம் பூரித்து
தினம் ஒரு
முத்தத்தையும்,
வலிக்காத
கன்னக்கடிகளையும்
பரிசாய் தந்தாள்.
அழையா விருந்தாளியாய்
அறிவொளி இயக்கத்தில்
இணைந்த போது,
என்னை ஆசானாக்கி
அழகு பார்த்தது...
சிலேட்டில் சிலேடை
எழுதியவனை
சீர்த்திருத்தியது ஒரு
கரும்பலகை.
குற்றியலுகரத்திற்கு
உதாரணம்
எழுதிட சொன்னது ஒரு
சமயம்.
வேகமாய் சென்று
“எனக்கு தெரியாது” என
எழுதி வந்தேன்.
நண்பர்கள்
சிரித்தார்கள்,
ஐயாவோ வியந்தார்.
கரும்பலகையுடன்
கரும்பு நிமிடங்கள்
அவை.
நானும் அவனை போல்
மாறிவிட்டேன்,
வாழ்க்கை பல வண்ணங்களை
தெளித்து செல்கிறது...
No comments:
Post a Comment