கைப்பிள்ளை காதல் என்கிறேன் – நீ
கைக்கிளை காதல் என்கிறாய்.
காவிய காதல் என்கிறேன்.
காவியங்களில் காதலர்கள்
இணைவதில்லை என்கிறாய்.
வாழ்ந்து காட்டுவோம் வா என்கிறேன்.
வேர்கள் இல்லாமல்
விழுதுகள் நிலைக்காது என்கிறாய்.
வலி இல்லாமல்
காதல் இல்லை என்கிறேன்.
வழியே இல்லை
தேடல் எங்கே என்கிறாய்.
காட்டாற்றுக்கு வழி
தேவை இல்லை என்கிறேன்.
காதலூற்றுக்கு மடை அதிகம் என்கிறாய்.
அணையிட்டு அடைத்தாலும்
அடங்காது காதல் என்கிறேன்.
அழகிய வார்த்தைகள்
வாழ்க்கைக்கு உதவாது என்கிறாய்.
என்னை என்ன தான்
செய்ய சொல்கிறாய் என்கிறேன்.
மறந்துவிடு என்கிறாய்.
இது என்ன
பெட்ரோல் டீசல் விலையேற்றமா
இரண்டு நாள் கழித்து மறப்பதற்கு...
காதலில் மறந்துவிடு
என்பதன் பொருள் என்ன தெரியுமா
மனதின் ஒரு மூலையிலிருந்து
தினம் வதைக்கும் வலி...
இப்படி பேசியே
எனை வீழ்த்திவிட்டாய் என்கிறாய்.
வீழ்வது தானே
காதலில் சுகம் என்கிறேன்.
இதற்குமேல் விட்டால்
பேசிக்கொண்டே இருப்பாய் என
இதழ் கோர்த்துவிட்டாய்.
கயவர்கள் ரசிக்கிறார்கள்
மறைவிடம் செல்வோம் வா...
*கைக்கிளை – நிறைவேறா காதல்.
Arumai nanba :)
ReplyDeletevalakam pola super nanba :)
ReplyDelete