Wednesday, 19 September 2012

பொம்பள மனசு


முதல்முறையாக நான் எழுதும் கிராமத்து கவிதை...



விடிவெள்ளி முளைக்குமுன்னே,
ஆச ஒன்னு முளைச்சுடுச்சே...
கண்ணார அவன் அழக
காணாத என் மனசு
கண்டு ரசிக்க துணிஞ்சுடுச்சே...

கருப்பட்டி நெறத்தழகு
கன்னக்குழி சிரிப்பழகு
எண்ண வச்சு முடிச்சாலும்
மடியாத மீச அழகு
சேத்து வய லாண்டாலும்
சேறு படியாத கரவேட்டி அழகு
எத கண்டு வீழ்ந்தனு கேட்டா
நான் என்ன சொல்லுவேன்.

ஆடு ஓட்டி போகயில
வல ஒன்னு விரிச்சு வச்ச
சிறுபய சிரிப்பால...
சிக்கி தவிக்குது சிறுக்கி மனசு.
விளயாட்டா கூட விடுவிச்சாடத
விழுங்கிபுடும் விடலபுள்ள ஏக்கம்

வரப்புல தடுமாறி நீ நடந்தா
பதறி போகுது பாவி மனசு
ஓரமா நீ சிரிச்சு வச்சா
உசுர் நனைஞ்சு ஈரமாகுது
ஒத்தையில நான் படுத்தா
உன் நெனப்பு அங்க வந்து
எகத்தாளம் பண்ணி ஏகத்துக்கும் சிரிக்குது

போதுமய்யா....
பொருத்திருக்க முடியல
சேதி கேக்க ஓடிவாரேன்
எலகூட தூங்கி போன சாமத்துல...

ஓடி வந்த வேகத்த
ஓட ஒன்னு தடுத்துடுச்சே
சாதின்னு வேலி போட்டு
பாவி நெஞ்ச செதைச்சுடுச்சே

நெனப்புக்கு ஒருத்தன்
அணப்புக்கு இன்னொருத்தன்
இன்னும் எத்தன காலம் தான்யா
நோகும் இந்த பொம்பள மனசு...

2 comments:

  1. ஓடி வந்த வேகத்த
    ஓட ஒன்னு தடுத்துடுச்சே
    சாதின்னு வேலி போட்டு
    பாவி நெஞ்ச செதைச்சுடுச்சே
    உண்மை நண்பா.... மிக அழகாக இருக்கிறது. இன்னும் முயற்சி தேவை....

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் ஆயிரம் நண்பா... நேரம் கிடைக்கும் போதெல்லாம் வந்து செல்லுங்கள்...

      Delete