ஒரு மழை இரவில்
எங்கள் வீட்டு முன்கதவின் அருகே
ஒதுங்கி நின்றவனை
சாரல் தெரிக்காத இடத்தில்
படுக்க வைத்தேன்.
காலையில் அவனை காணவில்லை
எங்கேயோ போய்விட்டான்
என திரும்பினால்
மிதியடியை போர்த்திக்கொண்டு
மூலையில் முடங்கி கிடந்தான்.
அதை பார்த்த நொடியே
எனக்கு அவனை பிடித்துவிட்டது.
பக்கத்துவீட்டு அபி பாப்பா
அவன் ஏன்மா வொயிட்டா இருக்கான்
என கேட்க
அவன் பேரு வொயிட்டில
அதான் அப்பிடி இருக்கான்
என சொல்லியதிலிருந்து
அவன் பெயர் வொயிட்டி ஆனது.
அவனுக்கு சாப்பாடு வைக்காதிங்க
என்னையே விட மாட்டேங்குறான்
கோபித்துக் கொண்டார் ஹவுஸ் ஓனர்.
சில நாட்களில் பின் இரவுகளில் வரும்போது
பயங்கரமாய் குரைத்துவிட்டு
சாப்பாடு தட்டின் அருகே படுத்துக்கொள்வான்.
சாப்டுற நேரத்துல வெளில என்னடா வேல
தாமதமாய் வரும் போதெல்லாம்
திட்டிவிட்டு சாப்பிட அமரும்
தந்தையின் நினைவுகள் வந்து செல்லும்.
அசதியின் மிகுதியோ
பின் இரவு திரைப்படங்களின் சதியோ
சில வேலை நாட்களில்
எழுந்திருக்க மனமில்லாமல்
உறங்கும் போதெல்லாம்
காதருகே வந்து குரைத்தும்
கால்களுக்கிடையே குழைந்தும் எழுப்பிவிடுவான்.
பள்ளிநாட்களில் அதிகாலையில்
எழுப்பிவிடும் அம்மாவின் நினைவுகள்
தவறாமல் வந்து செல்லும்.
புதிதாய் ஒரு பூனைக்குட்டி
வந்தது அவனை போலவே..,
குட்டி என்பதால் அதன்மேல்
கரிசனம் மிகுந்தது.
அதை ஏற்றுக்கொள்ள முடியாமல்
சோகமாய் மூஞ்சியை தூக்கி வைத்துக்கொள்வான்.
விடுதியிலிருந்து திரும்பி வரும் அண்ணனை
அதிகமாய் கவனிக்கும் அம்மா மீது
நான் கொண்ட பொய் கோபம் நினைவினில் வரும்.
வெளியூர் சென்று திரும்பிவந்தால்
வேகமாய் வந்து தாவி கொள்வான்.
என்ன மாமா வாங்கிகிட்டு வந்திருக்க
என கட்டிக்கொள்ளும் கவியின்
நினைவுகள் வந்து செல்லும்.
அவனை உதாசினபடுத்துவது போல்
சில நாட்கள் நடந்துக்கொள்வேன்
சிணுங்கி கொண்டே செல்வான்.
நான் போரேன் என சொல்லிவிட்டு
போகாமல் நிற்கும்
யாழியின் நினைவுகள் வந்து செல்லும்.
என் கவலைகளை நான் பகிர்ந்துகொண்டால்
ஆறுதல் சொல்லாமல், அவமதிக்காமல்,
அறிவுரை கூறாமல் அப்படியே
ஏற்றுக்கொள்ளும் நண்பன் அவன்.
“இவன் கூட விளையாண்டா
மனசு ரிலாக்ஸ் ஆயிடுதுப்பா”
தினம் அவனுடன் விளையாடுவதற்காகவே
வந்து சென்ற ஹவுஸ் ஓனரின் வார்த்தைகள்.
இன்றும் வந்து செல்கிறார்
அவன் இல்லாத வெறுமையை
வெறித்து பார்த்த படியே...
ஒரு எதிர்பாராத விபத்தில்
இறந்துவிட்ட அவனின் நினைவுகளை
இந்த வெறுமையே எங்களுக்கு நினைவூட்டி செல்கிறது...
No comments:
Post a Comment