Sunday, 30 September 2012

inbox


விஜய், அஜித்தை எல்லாம் கலாய்க்கிற மெஸ்ஸேஜ் அவங்களுக்கு போகுமா, போகாதா...

நண்பன் பர்த்டேக்கு விஷ் பண்ண நைட் 12மணிக்கு கால் பண்ணேன். நீ ஏன்டா கால் பண்ண என் ஆளு தான் ஃபர்ஸ்ட்டு விஷ் பண்ணனும்னு நினைச்சு இருந்தேன்டா என சொன்னான். அன்றிலிருந்து அவன் பர்த்டேக்கு விஷ் பண்றதயே விட்டுட்டேன்.

சச்சின் செஞ்சுரி அடிச்சா யாரு ஃபர்ஸ்ட் விஷ் பண்ணுவாங்க...

ஹல்லோ...
ஹெல்லோ...
அண்ணே.., அரிசி வந்துருச்சாண்ணே,
இல்லையேப்பா...
எப்பண்ணே வரும்...
தெரியலியேப்பா...
விளையாடதிங்கண்ணே...
நான் இப்ப தான்பா விளையாடவே போரேன்...
கால் கட்.., ஒரு இரண்டு நிமிடம் கழித்து அதே நம்பரில் இருந்து மீண்டும் அழைப்பு.
ஹல்லோ ராங்க் நம்பர்னா சொல்ல வேண்டியது தானே...
சரி ராங்க் நம்பர்னு சொல்லி கால்ல கட் பண்ணிட்டேன் பாவம் மனுசன் என்னென்ன சாபம் விட்டானோ...

இந்த பொண்ணுங்க எப்படி தான் இவ்வளவு ஸ்பீடா மெஸ்ஸேஜ் அனுப்புறாங்கனே தெரியலப்பா...
தலவலிக்குதுனு ஒரு மெஸ்ஸேஜ் அனுப்புனேன்...
ஏன் நேத்து சரக்கு அடிச்சியா...?
என்ன லவ் பண்றியா இல்லையா...?
நான் எது சொன்னாலும் கேக்க மாட்டியா...?
ஃபர்ஸ்ட் மெஸ்ஸேஜ்க்கு ரிப்ளே அனுப்புறதுக்குள்ள இத்தன மெஸ்ஸேஜ் வந்தா நான் எதுக்கு ரிப்ளே பண்றது... எதுக்கு வம்புனு ரிப்ளே பண்ணாமலேயே விட்டுட்டேன்.
நான் எது கேட்டாலும் சொல்ல மாட்டல...? I hate you…
இதுக்கு மட்டும் ரிப்ளே பண்ணேன் thank you…

ஒரு விருந்துக்கு நானும் என் அண்ணனும் ஒன்றாக ஒரு பேருந்தில் சென்றோம். அவன் டிக்கெட் எடுப்பான்னு நான் இருக்க, நான் டிக்கெட் எடுப்பேன்னு அவன் இருக்க, கடைசில ரெண்டு பேருமே டிக்கெட் எடுக்கல... கரெக்ட்டா வந்தானுக மாப்பிள்ளைங்க ரெண்டு பேரும் மாட்டிக்கிட்டோம். அப்போ தான் வந்துச்சு ஒரு மெஸ்ஸேஜ், “என்ட ஜேஞ்ச் இல்ல நீ டிக்கெட் எடுத்துடு”னு எங்க அண்ணன் ஏறுன உடனே அனுப்புன மெஸ்ஸேஜ்.

அமெரிக்கா போயிட்டு வந்த நண்பனின் பார்ட்டி. ஃபாரின் சரக்கு என்பதால் காலைலியே பார்ட்டி. நம்ம சென்னை ட்ராஃபிக் பத்தி தான் தெரியுமே அதுவும் பஸ்ல போயிட்டு இருந்தேன். எங்கடா இருக்க...?, எங்கடா இருக்க...?னு கால் பண்ணிக்கிட்டே இருந்தானுக.
மச்சான் இந்தா சோழிங்கநல்லூர் வந்துட்டேன்டா, இன்னும் பத்து நிமிஷத்துல கேளம்பாக்கம் வந்துடுவேன்.
பெருங்குடி எறங்க வேண்டியிருக்கா... பெருங்குடி பெருங்குடி...
கண்டக்டர் அண்ணே ஏன்ணே...?

கண்ணிரண்டும் மூடி தொலைப்பேசி சுழற்றுங்கள்
எதிர்முனையில் எவர்வரினும் அன்றைய விருந்துக்கு அழையுங்கள்.
-    பெய்யென பெய்யும் மழை கவிதை தொகுப்பில் வைரமுத்து.

ஒரு நாள் போரடிக்குதே நாமளும் ட்ரை பண்ணி பாப்போம்னு ஒரு நம்பருக்கு கால் பண்ணேன். இங்க்லீஷ் படம் நிறையா பாத்து இருப்பா போல, செமையா திட்டிவிட்டா, அதுலயும் ஒரு வார்த்தைக்கு மீனிங்க் கண்டுபிடிக்கவே எனக்கு ஒரு வாரம் ஆச்சு...
மன்னிச்சுடுங்க வைரமுத்து சார் அந்த கெட்ட வார்த்தைய யூஸ் பண்ணி உங்களயும் திட்டிட்டேன்.

நெடு நாட்களுக்கு பிறகு தோழியின் அழைப்பு, N-ல் ஆரம்பிக்குமாறு அவள் குழந்தைக்கு பெயர் சொல்ல சொன்னாள். நறுமுகை, நிறைமதி என பரிந்துரை செய்தேன். அவர்களுக்கு நறுமுகை என்ற பெயர் பிடித்துவிட்டது. நறுமுகை – நறுமணம் மிக்க புதிதாய் மலர்ந்த மலர். அழகிய தமிழ் பெயர்கள் நிறைய இருக்க எதற்கு புரியாத மொழிகளில் பெயர் வைக்க வேண்டும்.

ஒன் நம்பர் ரிசீவ்டு!
சாலையில் ஆதரவற்று நிற்கும் குழந்தைகளுக்கு உதவ நினைத்தால், 1098-க்கு போன் செய்யுங்கள். இது மட்டும் இல்லை... குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருப்பது, சிறார் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைகள், 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து தருவது எனக் குழந்தைகள் மீதான அனைத்து வகையான தீங்குகளுக்கு எதிராகவும் இந்த எண்ணுக்கு அழைத்து பேசலாம். அந்தந்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்!
நன்றி :- ஆனந்த விகடன்.

Tuesday, 25 September 2012

கனவுகள் இனிக்கட்டும்.....


ஏன்டா இப்டி பித்துபிடிச்சவன் மாதிரி உக்காந்து இருக்க...?

சீரியஸ்னெஸ்னாலே என்னனு தெரியாதவன் வாழ்க்கைல சீரியல் கில்லரா அவ நினைவுகள் மச்சி. ஒரு நிமிசம் தான் அவள பாத்தேன் என்ன மறந்து திரியுறேன்டா.

அவ என்ன அவ்ளோ அழகா...!?

அப்டிலாம் ஒன்னும் இல்ல... வொயிட் ட்ரெஸ் போட்டுட்டு வந்தா தேவதை என்பவள் அவள போல இருப்பாடா...

அவ பேரு என்னடா...?

செல்லமா கூப்பிட என்ன பேரு வைக்கலாம்னு நானும் யோசிச்சேன். எந்த பேரும் அவ அளவுக்கு அழகா இல்ல, அதனால நீ பேர் இல்லாமலயே இருந்துட்டு போனு விட்டுட்டேன்.

அவள எங்கடா பாத்த..?

சித்திரை மாத நிலவுல காவிரி ஆத்து மணல்ல கண் அசந்த நேரம். பக்கத்துல இருந்தும் தொட முடியாத தூரத்துல...

ஓ.. கனவுலயா... அவள எப்புடிடா இங்க தேடுவ...?

ஆமால்ல... அப்போ எனக்கு இந்த உலகமே வேணாம். நான் கனவுலயே இருக்கேன்.

கனவுகள் இனிக்கட்டும்.....

Monday, 24 September 2012

INBOX


திங்க கிழமை காலைல அலார்ம் அடிச்சா, போன செவுத்துல அடிச்சு உடைச்சிருலாம்ன்ற அளவுக்கு கோவம் வருது...

உங்களுக்கு பிடித்த பாடல் பிடிக்காமல் போக வேண்டுமா, அத காலர் ட்யூனாக செட் பண்ணுங்கள்.

சாலையை கடக்கும் போதும், வண்டி ஓட்டும் போதும் செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் விபத்துகள், விபத்துகளுக்கான காரணிகளில் இரண்டாம் இடம் பிடிக்கிறது. முதலிடம் தலைக்கவசம் அணியாதது. இந்த இரு காரணிகளாலும் அதிகம் விபத்திற்குள்ளானது பெண்கள்.
- சமீபத்திய சென்னை மாநகராட்சியின் அறிக்கை.

ஏதோ கவிதன்ற பேர்ல ஒன்னு எழுதி கனவுகள் இனிக்கட்டும் என்று நண்பர்களுக்கு இரவுகளில் குறுஞ்செய்தி அனுப்புவது உண்டு. சிலசமயங்களில் வடஇந்திய தோழர்களுக்கும் அனுப்பிவிடுவேன். புரிகிறதோ இல்லையோ ஒருத்தன் மட்டும் கனவுகள் இனிக்கட்டும் என பதில் அனுப்புவான். தமிழ வளர்த்துவிட்ட திருப்தி.

ஆண்ட்ராய்டு போன்ல ஆண்ட்ரியா போட்டோவ வச்சாலும் நமக்கு கால் பண்ண போரது நம்ம ஊர் கிழவி தான். ஸ்மார்ட் போன் கேட்ட தம்பிக்கு சித்தப்பாவின் பஞ்ச். நல்ல வேள நான் அவர்ட்ட ஐடியா கேக்கல...

கிளம்பும்போது தவறுதலாக என் மொபைல் கீழே விழுந்து சிதற..., கொஞ்ச நேரம் உக்காந்துட்டு போடா, சகுனமே சரியில்லனு அக்கா சொன்னா... எப்படிடா டெக்னாலஜி வளர வளர மூடநம்பிக்கையையும் சேர்த்து வளக்குறீங்க...

எவன் எவனோ பந்த் நடத்துறான் இந்த செல்போன் கம்பனிகாரங்க ஒரு வாரத்துக்கு ஸ்டைரக் பண்ணா எப்பிடி இருக்கும் ஒரு வினோத எண்ணம்...
ஷங்கர் படம் மாதிரி பிரம்மாண்டமா நெனப்பு ஓடுது வார்த்தையில விவரிக்க முடில...

எனக்கு வாய்த்த நண்பர்கள் மிகவும் நல்லவர்கள், எனக்கு பகல்ல கால் பண்ணவே மாட்டானுக..., ஆனா நட்டநடு ராத்திரில கால் பண்ணி டார்ச்சர் பண்ணுவானுக..., சாம்பிள்க்கு இதோ...
தூங்கிட்டியா...
இப்பதான்டா படுத்தேன் சொல்லிதொல...
அவ அம்மா முளிச்சுட்டாங்களாம் பத்து நிமிசம் கழிச்சு கால் பண்றேன்னு சொன்னா அதான் அதுக்குள்ள தூங்கிடகூடாதுல...
அதுக்கு எதுக்குடா எனக்கு கால் பண்ண...
எனக்கு உன்னவிட்டா வேற யாரு மச்சான் இருக்கா...
பத்து நிமிசம் கழிச்சு...
மச்சான் குட்நைட்னு மெசேஜ் அனுப்பிட்டா தூங்கிட்டானு நினைக்கிறேன், எனக்கும் தூக்கம் வருது. குட்நைட் மச்சி கனவுகள் இனிக்கட்டும்...
அதுக்கு அப்புறம் நீட்டி, மடக்கி, ஒருக்குணிச்சு, புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் வரேவே வராது...

இன்னும் மூணு நாளைக்கி மழ இல்ல, ஆனா மேகமூட்டம் இருக்கும் என அப்ளிக்கேசன பார்த்து வானிலை அறிக்கை சொன்னேன்
ஆமா..., ரமணன் சொல்லியே வாராத மழ இவர் சொல்லி வரபோகுதாக்கும், எலேய்.., நிலாவ சுத்தி பரிவட்டம் கட்டிடுச்சு நாளைக்கி ராத்திரிகுள்ள மழ வருதா இல்லையானு மட்டும் பாரு... சொல்லிவிட்டு வீராப்பா கடந்துபோனார் சித்தப்பா
ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்கள திருத்தமுடியாதுனு முணகிகிட்டே படுத்தேன்.
விடுஞ்சு எழுந்து பாத்தா வீதியெல்லாம் வெள்ளம்...
சாட்டிலைட்டுகே சவால் விடுறாங்கபா நம்ம ஆளுங்க...

JP எனக்கும் அவருக்கும் எப்பவுமே செட் ஆகாது...
ஜாவால INHERITANCE -க்கு சாம்பிள் ப்ரோக்ராம் எழுதி போட்டுட்டு இருந்தாரு...
க்ளாஸ் னாலே என்னானு தெரியாது, இதுல சூப்பர் க்ளாஸ் வேறயா, எவனோ கமெண்ட் அடிக்க, சிரிச்சுட்டானுக முன்னாடி இருந்தவனுக..
க்ளாஸ்ல நமக்கு எதிரியே இவனுங்க தான் சிரிச்சே சிக்க வச்சுருவானுக..
அவர் திரும்புனதும் சிக்குனது நான் தான்...
ஏந்திரி இந்த சூப்பர் க்ளாஸ்க்கு ஆப்ஜக்ட் க்ரீயேட் பண்ணு...
எனக்கென்ன தெரியும் தலைய தொங்கபோட்டு நின்னேன்...
நெக்ஸ்ட்... நெக்ஸ்ட்... நெக்ஸ்ட்...
கடைசி ரோ ஃபுல்லா எழுந்திருச்சு நின்னுடுச்சு.., எவனுக்கும் தெரியல...
ஒரு மாசமா க்ளாஸ் எடுக்குறேன் ஒரு ஆப்ஜக்ட் க்ரீயேட் பண்ண தெரிலனா எதுக்கு நீங்கலாம் க்ளாஸ்க்கு வரீங்க... உச்சகட்ட கோபத்தில் ஏதேதோ திட்டினார்...
எனக்குள்ள இருந்த சிங்கத்த தட்ட்டி எழுப்பீட்டிங்க... அசோக்... உன் காலண்டர்ல குறிச்சு வச்சிக்கோ இந்த நாள் உன் வாழ்க்கைல மறக்கமுடியாத நாள்... உனக்கும் எனக்கும் தர்ம யுத்தம் ஆரம்பம் ஆயிடுச்சு....
கத்தி தொலச்சிடுச்சு, ஷூ சாக்ஸ்க்குள்ள ஒளிச்சு வச்சிருந்த என் செல்போன்.
ஒழுங்கா வெளில போயிடு..., இனிமே என் க்ளாஸ் பக்கமே எட்டி பாக்காத..., எதுவும் பேசாத வெளில போயிடு..., அதுக்கு முன்னாடி அவ்ளோ கோவமா நான் அவர பாத்ததேயில்ல,
பாவம் அவருக்கு ரஜினிய புடிக்காது போல இருக்கு...

Saturday, 22 September 2012

யோகியுடன் ஒரு தேநீர் கோப்பை


நம்ம நேரத்தையெல்லாம் வீணடிக்கும் யோகியுடன் ஒரு கலகல பேட்டி எத பத்தி கேட்டாலும் தயங்காமல் பதில் சொல்கிறார். நம்மள எல்லாம் யாரு பேட்டி எடுக்க போறா..., அதான் எனக்கு நானே எடுத்துகிட்டேன்.

சின்னபையன்....?
வீட்டிற்கு கடைசி பையன், அதனால எல்லாரும் அப்பிடி கூப்பிடுவாங்க... சின்னபையன் என எனை சீண்டி சூடுபட்டு கொண்டவர்களும் உண்டு.

யோகி...?
யோகேஷ்வரன் யோகி ஆனது தனிக்கதை..., மறக்கமுடியாத ஒரு தோழி விட்டுச்சென்ற தடயம்.

யாழி...?
யோகினா அடுத்து யாழி தானா... நல்லா இருக்குங்க உங்க பேட்டி...
பாரதிக்கு கண்ணம்மா என்ற பெயரில் எவ்வளவு காதலோ.., அவ்வளவு காதல் எனக்கு அந்த பெயரின் மேல். என் எழுத்துகளில் எங்கே ஒரு பெண்ணின் பெயர் குறிப்பிட நேர்ந்தாலும் இந்த பெயர் தான் வந்து செல்லும். எனவே தான் யாழிக்கு கவிதைகள்.

கொள்கை...?
சிரிப்பது, சிரிக்க வைப்பது
ரசிப்பது, ரசிக்க வைப்பது

பொழுதுபோக்கு...?
ரசிப்பது, எழுதுவது, வாசிப்பது

வாசித்ததில் பிடித்தது...?
பொன்னியின் செல்வனும், கள்ளிக்காட்டு இதிகாசமும்.

ஆளுமை...?
பாரதி

வாழ்க்கையில் கடைபிடிக்கும் தத்துவம்...?
களவும் கற்று மற...
ஆனா பொய் சொல்றத மட்டும் மறக்க முடியல...

வாழ்க்கை கற்று தந்த தத்துவம்...?
யார் மீதும் அதிகமாய் அன்பு செலுத்தாதே...

பலவீனம்...?
கூச்ச சுபாவம், அதீத தயக்கம்

பயம்...?
நான் சொன்ன பொய்யெல்லாம் தெரிஞ்சுடுமோ...

நட்பு...? நண்பர்கள்...?
இந்த வகையில் நான் வஞ்சிக்க படவேயில்லை. நல்ல நண்பர்களை சுற்றி நான் இருக்கிறேன். தனித்து காட்டில் விட்டாலும் அங்கே எனக்கு துணையாய் ஓர் நண்பன் இருப்பான்.


முகேஷ்  -   மழலை முதல் மரணம் வரை
அன்பு     -    காதல் போல் புரிதல் கொண்ட நட்பு
தினேஷ்  -    எனெக்கென அவன், அவனுக்கென நான்
அரவிந்த்  -    உலக சினிமா முதல் உள்ளூர் இனிமா வரை
பகிர்ந்துக்கொள்ளும் நண்பன்

காதல்...?
ஏங்க இந்த கேள்விய கேட்காம பேட்டியே எடுக்க முடியாதா...
கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு தொடர்கிறார்.
நானாக தேடி சென்ற காதல் என்னை நிராகரித்தது, என்னை தேடி வந்த
காதலை நான் நிராகரித்துவிட்டேன்.

திருமணம்...?
வீட்டின் சம்மதத்தோடு காதல் திருமணம் செய்துக்கொள்ள ஆசை, இல்லனா எந்த கரிசகாட்டுல இருக்காளோ...

பிடித்த நடிகை...?
இப்ப தான் நம்ம ஏரியாக்கு வந்து இருக்கீங்க... ஒன்னா ரெண்டா சொல்றதுக்கு, பரவால்ல டாப் ரேங்கர்ஸ் மட்டும் சொல்றேன்
அமலா நாகார்ஜுனா, கௌதமி, சிம்ரன், ஜோ, அனுஷ்கா, காட்ரினா கைஃப், இப்போதைக்கு லக்ஷ்மி மேனன். But all-time favorite is AISHWARYA RAI.

Celebrities crush…?
ஷ்ரேயா கோஷல், சாய்னா நேவால்...

சமீபத்திய கிசுகிசு...?
என்ன பத்தி என்டயே கிசுகிசுவா... சூப்பருங்க... ஆனா யார்ட்டயும் சொல்லிடாதீங்க...
மாடி வீட்ல இருக்குற பொண்ண லவ் பண்றேன்னு என்டயே சொல்றானுக பாவி பசங்க...

அரசியல்...?
அப்பா அ.தி.மு.க பிரதிநிதி.., மாமா தஞ்சை மாவட்ட முக்கிய தி.மு.க புள்ளிகளுல் ஒருவர். எனவே கவனிப்பதும் விவாதிப்பதும் உண்டு.

பிடித்த அரசியல்வாதி...?
இறந்ததில் காமராஜர், இருப்பதில் தமிழருவி மணியன். கருத்துகள் முரண்பட்டாலும் தோழர் நல்லக்கண்ணுவின் எளிமையும், தூய்மையும் பிடிக்கும்.

நீண்டநாள் நிறைவேறாத ஆசை...?
நீ இல்லை என்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன் இந்த வார்த்தைகளை சொல்லவாவது ரஹ்மானை சந்திக்க வேண்டும். அப்புறம் ஒரே ஒரு பால் சச்சினுக்கு வீசனும்.

சாஃப்ட்வேர்...?
தசாவதாரம் கமலஹாசன் மாதிரியோ..., ஏழாம் அறிவு ஷ்ருதிஹாசன் மாதிரியோ..., ஏதாவது ஒரு கிருமியையோ இல்லை பரம்பரை பண்பையோ ஆராய்வது தான் விருப்பமாய் இருந்தது. குடும்பத்திற்காக தேர்ந்து எடுத்தேன்.

வாழ்க்கை...?
பிறருக்காகவே நீள்கிறது... என்று எனக்காக வாழ்வேன் என தெரியவில்லை.

கவிதை...?
விளையாட்டாய் ஒட்டிக்கொண்ட அழகிய வினை.

முதல் கவிதை...?
நீ பேசமால் சென்றாலும்
உன் விழிகள் பேசும்
மௌணம் அழகு...

அங்கீகாரம்...?
பாரத் கல்லூரியின் ஆண்டு மலரின் முதல் பக்கத்தில் இடம்பெற்ற கவிதை முதல் அங்கீகாரம். தோழிக்காக எழுதிய கவிதைக்கு கிட்டிய பரிசு இரண்டாம் அங்கீகாரம். விப்ரோ தளத்தில் தினம் கிட்டும் நட்பு மூன்றாம் அங்கீகாரம். ஆனால் என்னை அதிகமாய் சிந்திக்க வைத்து எழுத வைக்கும் இந்த தளத்தைத்தான் சிறந்த அங்கீகாரமாய் கருதுகிறேன்.

ஒரு நன்றி அல்லது மன்னிப்பு...?
நன்றி அன்புக்கு...
மன்னிப்பு யாழிக்கு...

வெறுமையாகிய நினைவுகள்


ஒரு மழை இரவில்
எங்கள் வீட்டு முன்கதவின் அருகே
ஒதுங்கி நின்றவனை
சாரல் தெரிக்காத இடத்தில்
படுக்க வைத்தேன்.
காலையில் அவனை காணவில்லை
எங்கேயோ போய்விட்டான்
என திரும்பினால்
மிதியடியை போர்த்திக்கொண்டு
மூலையில் முடங்கி கிடந்தான்.
அதை பார்த்த நொடியே
எனக்கு அவனை பிடித்துவிட்டது.

பக்கத்துவீட்டு அபி பாப்பா
அவன் ஏன்மா வொயிட்டா இருக்கான்
என கேட்க
அவன் பேரு வொயிட்டில
அதான் அப்பிடி இருக்கான்
என சொல்லியதிலிருந்து
அவன் பெயர் வொயிட்டி ஆனது.

அவனுக்கு சாப்பாடு வைக்காதிங்க
என்னையே விட மாட்டேங்குறான்
கோபித்துக் கொண்டார் ஹவுஸ் ஓனர்.

சில நாட்களில் பின் இரவுகளில் வரும்போது
பயங்கரமாய் குரைத்துவிட்டு
சாப்பாடு தட்டின் அருகே படுத்துக்கொள்வான்.
சாப்டுற நேரத்துல வெளில என்னடா வேல
தாமதமாய் வரும் போதெல்லாம்
திட்டிவிட்டு சாப்பிட அமரும்
தந்தையின் நினைவுகள் வந்து செல்லும்.

அசதியின் மிகுதியோ
பின் இரவு திரைப்படங்களின் சதியோ
சில வேலை நாட்களில்
எழுந்திருக்க மனமில்லாமல்
உறங்கும் போதெல்லாம்
காதருகே வந்து குரைத்தும்
கால்களுக்கிடையே குழைந்தும் எழுப்பிவிடுவான்.
பள்ளிநாட்களில் அதிகாலையில்
எழுப்பிவிடும் அம்மாவின் நினைவுகள்
தவறாமல் வந்து செல்லும்.

புதிதாய் ஒரு பூனைக்குட்டி
வந்தது அவனை போலவே..,
குட்டி என்பதால் அதன்மேல்
கரிசனம் மிகுந்தது.
அதை ஏற்றுக்கொள்ள முடியாமல்
சோகமாய் மூஞ்சியை தூக்கி வைத்துக்கொள்வான்.
விடுதியிலிருந்து திரும்பி வரும் அண்ணனை
அதிகமாய் கவனிக்கும் அம்மா மீது
நான் கொண்ட பொய் கோபம் நினைவினில் வரும்.

வெளியூர் சென்று திரும்பிவந்தால்
வேகமாய் வந்து தாவி கொள்வான்.
என்ன மாமா வாங்கிகிட்டு வந்திருக்க
என கட்டிக்கொள்ளும் கவியின்
நினைவுகள் வந்து செல்லும்.

அவனை உதாசினபடுத்துவது போல்
சில நாட்கள் நடந்துக்கொள்வேன்
சிணுங்கி கொண்டே செல்வான்.
நான் போரேன் என சொல்லிவிட்டு
போகாமல் நிற்கும்
யாழியின் நினைவுகள் வந்து செல்லும்.

என் கவலைகளை நான் பகிர்ந்துகொண்டால்
ஆறுதல் சொல்லாமல், அவமதிக்காமல்,
அறிவுரை கூறாமல் அப்படியே
ஏற்றுக்கொள்ளும் நண்பன் அவன்.

“இவன் கூட விளையாண்டா
மனசு ரிலாக்ஸ் ஆயிடுதுப்பா”
தினம் அவனுடன் விளையாடுவதற்காகவே
வந்து சென்ற ஹவுஸ் ஓனரின் வார்த்தைகள்.

இன்றும் வந்து செல்கிறார்
அவன் இல்லாத வெறுமையை
வெறித்து பார்த்த படியே...
ஒரு எதிர்பாராத விபத்தில்
இறந்துவிட்ட அவனின் நினைவுகளை
இந்த வெறுமையே எங்களுக்கு நினைவூட்டி செல்கிறது...

Thursday, 20 September 2012

இன்னும் ஒரு நாள்


ஐந்து பெண் குழந்தைகளுக்கு பிறகு
ஆறாவதாய் ஆண் குழந்தைக்கு முயற்சிப்பதாக
பக்கத்துவீட்டு மாமா சொன்னார்.
யான் பெற்ற சிற்றின்பம்
பெருக்க இவ்வையகம்
என நினைத்துவிட்டார் போலும்...

கடைகள் அடைக்கப்பட்ட மாநகர வீதியில்
பதறாமல், பரிதவிக்காமல்
பசியாற இளைப்பாறி நடந்தேன்
முதன்முறையாக...
கடந்து சென்ற
தாவணி கவிதை ஒன்றை
நீ அழகாய் இருக்கிறாய்
என சொல்ல துடித்து
தைரியம் இல்லாமல்
முடங்கி போனது மனது...

அங்க என்ன சார் பிரச்சனை என்றேன்
முஸ்லீம்ஸ் என ஒற்றை வார்த்தையில்
ஒரு இனப்படுகொலைக்கான
வித்தை விதைத்து சென்றார்
ஒரு காவல்துறை அதிகாரி.
முஸ்லீம்ஸ் எல்லாரும்
தீவிரவாதிகள் இல்லை சார் என்றேன்
ம்ம்... உன் பேர் என்ன என்றார்
மிரட்டல் தொனியுடன்
யோகி என்றேன் நான்.
அப்துல் கசாப் என்றிருந்தால்
தூக்கில் இட்டிருப்பாரோ...

தரை மீது படர்ந்ததும்
எனை தழுவி கொண்டது
பின் மதியத்து மயக்கம்.
என் பொழுதுகளை களவாடியது
எதுவென்று தெரியவில்லை.

யுவியின் சிக்சர் ஒரு நொடி
முகநூலில் நண்பனுக்கு லைக் மறுநொடி
அலைபேசியில் அக்காவின் நலம் அடுத்த நொடி
விளம்பர இடைவெளியில் திரைப்படம் மறுநொடி
என தடம் மாறி கொண்டிருந்த மனது
இந்த கவிதையை படைத்தது
எப்படி எனவென்றும் தெரியவில்லை.

இன்னுமொரு நாள் என
கழிந்த பொழுதில்
உருப்படியாய் செய்தது
இது ஒன்றை தான் என
இளைப்பாற சென்று விட்டது மனது
ஆனால் உறக்கம் மட்டும் வரவேயில்லை...