Saturday, 22 September 2012

யோகியுடன் ஒரு தேநீர் கோப்பை


நம்ம நேரத்தையெல்லாம் வீணடிக்கும் யோகியுடன் ஒரு கலகல பேட்டி எத பத்தி கேட்டாலும் தயங்காமல் பதில் சொல்கிறார். நம்மள எல்லாம் யாரு பேட்டி எடுக்க போறா..., அதான் எனக்கு நானே எடுத்துகிட்டேன்.

சின்னபையன்....?
வீட்டிற்கு கடைசி பையன், அதனால எல்லாரும் அப்பிடி கூப்பிடுவாங்க... சின்னபையன் என எனை சீண்டி சூடுபட்டு கொண்டவர்களும் உண்டு.

யோகி...?
யோகேஷ்வரன் யோகி ஆனது தனிக்கதை..., மறக்கமுடியாத ஒரு தோழி விட்டுச்சென்ற தடயம்.

யாழி...?
யோகினா அடுத்து யாழி தானா... நல்லா இருக்குங்க உங்க பேட்டி...
பாரதிக்கு கண்ணம்மா என்ற பெயரில் எவ்வளவு காதலோ.., அவ்வளவு காதல் எனக்கு அந்த பெயரின் மேல். என் எழுத்துகளில் எங்கே ஒரு பெண்ணின் பெயர் குறிப்பிட நேர்ந்தாலும் இந்த பெயர் தான் வந்து செல்லும். எனவே தான் யாழிக்கு கவிதைகள்.

கொள்கை...?
சிரிப்பது, சிரிக்க வைப்பது
ரசிப்பது, ரசிக்க வைப்பது

பொழுதுபோக்கு...?
ரசிப்பது, எழுதுவது, வாசிப்பது

வாசித்ததில் பிடித்தது...?
பொன்னியின் செல்வனும், கள்ளிக்காட்டு இதிகாசமும்.

ஆளுமை...?
பாரதி

வாழ்க்கையில் கடைபிடிக்கும் தத்துவம்...?
களவும் கற்று மற...
ஆனா பொய் சொல்றத மட்டும் மறக்க முடியல...

வாழ்க்கை கற்று தந்த தத்துவம்...?
யார் மீதும் அதிகமாய் அன்பு செலுத்தாதே...

பலவீனம்...?
கூச்ச சுபாவம், அதீத தயக்கம்

பயம்...?
நான் சொன்ன பொய்யெல்லாம் தெரிஞ்சுடுமோ...

நட்பு...? நண்பர்கள்...?
இந்த வகையில் நான் வஞ்சிக்க படவேயில்லை. நல்ல நண்பர்களை சுற்றி நான் இருக்கிறேன். தனித்து காட்டில் விட்டாலும் அங்கே எனக்கு துணையாய் ஓர் நண்பன் இருப்பான்.


முகேஷ்  -   மழலை முதல் மரணம் வரை
அன்பு     -    காதல் போல் புரிதல் கொண்ட நட்பு
தினேஷ்  -    எனெக்கென அவன், அவனுக்கென நான்
அரவிந்த்  -    உலக சினிமா முதல் உள்ளூர் இனிமா வரை
பகிர்ந்துக்கொள்ளும் நண்பன்

காதல்...?
ஏங்க இந்த கேள்விய கேட்காம பேட்டியே எடுக்க முடியாதா...
கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு தொடர்கிறார்.
நானாக தேடி சென்ற காதல் என்னை நிராகரித்தது, என்னை தேடி வந்த
காதலை நான் நிராகரித்துவிட்டேன்.

திருமணம்...?
வீட்டின் சம்மதத்தோடு காதல் திருமணம் செய்துக்கொள்ள ஆசை, இல்லனா எந்த கரிசகாட்டுல இருக்காளோ...

பிடித்த நடிகை...?
இப்ப தான் நம்ம ஏரியாக்கு வந்து இருக்கீங்க... ஒன்னா ரெண்டா சொல்றதுக்கு, பரவால்ல டாப் ரேங்கர்ஸ் மட்டும் சொல்றேன்
அமலா நாகார்ஜுனா, கௌதமி, சிம்ரன், ஜோ, அனுஷ்கா, காட்ரினா கைஃப், இப்போதைக்கு லக்ஷ்மி மேனன். But all-time favorite is AISHWARYA RAI.

Celebrities crush…?
ஷ்ரேயா கோஷல், சாய்னா நேவால்...

சமீபத்திய கிசுகிசு...?
என்ன பத்தி என்டயே கிசுகிசுவா... சூப்பருங்க... ஆனா யார்ட்டயும் சொல்லிடாதீங்க...
மாடி வீட்ல இருக்குற பொண்ண லவ் பண்றேன்னு என்டயே சொல்றானுக பாவி பசங்க...

அரசியல்...?
அப்பா அ.தி.மு.க பிரதிநிதி.., மாமா தஞ்சை மாவட்ட முக்கிய தி.மு.க புள்ளிகளுல் ஒருவர். எனவே கவனிப்பதும் விவாதிப்பதும் உண்டு.

பிடித்த அரசியல்வாதி...?
இறந்ததில் காமராஜர், இருப்பதில் தமிழருவி மணியன். கருத்துகள் முரண்பட்டாலும் தோழர் நல்லக்கண்ணுவின் எளிமையும், தூய்மையும் பிடிக்கும்.

நீண்டநாள் நிறைவேறாத ஆசை...?
நீ இல்லை என்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன் இந்த வார்த்தைகளை சொல்லவாவது ரஹ்மானை சந்திக்க வேண்டும். அப்புறம் ஒரே ஒரு பால் சச்சினுக்கு வீசனும்.

சாஃப்ட்வேர்...?
தசாவதாரம் கமலஹாசன் மாதிரியோ..., ஏழாம் அறிவு ஷ்ருதிஹாசன் மாதிரியோ..., ஏதாவது ஒரு கிருமியையோ இல்லை பரம்பரை பண்பையோ ஆராய்வது தான் விருப்பமாய் இருந்தது. குடும்பத்திற்காக தேர்ந்து எடுத்தேன்.

வாழ்க்கை...?
பிறருக்காகவே நீள்கிறது... என்று எனக்காக வாழ்வேன் என தெரியவில்லை.

கவிதை...?
விளையாட்டாய் ஒட்டிக்கொண்ட அழகிய வினை.

முதல் கவிதை...?
நீ பேசமால் சென்றாலும்
உன் விழிகள் பேசும்
மௌணம் அழகு...

அங்கீகாரம்...?
பாரத் கல்லூரியின் ஆண்டு மலரின் முதல் பக்கத்தில் இடம்பெற்ற கவிதை முதல் அங்கீகாரம். தோழிக்காக எழுதிய கவிதைக்கு கிட்டிய பரிசு இரண்டாம் அங்கீகாரம். விப்ரோ தளத்தில் தினம் கிட்டும் நட்பு மூன்றாம் அங்கீகாரம். ஆனால் என்னை அதிகமாய் சிந்திக்க வைத்து எழுத வைக்கும் இந்த தளத்தைத்தான் சிறந்த அங்கீகாரமாய் கருதுகிறேன்.

ஒரு நன்றி அல்லது மன்னிப்பு...?
நன்றி அன்புக்கு...
மன்னிப்பு யாழிக்கு...

வெறுமையாகிய நினைவுகள்


ஒரு மழை இரவில்
எங்கள் வீட்டு முன்கதவின் அருகே
ஒதுங்கி நின்றவனை
சாரல் தெரிக்காத இடத்தில்
படுக்க வைத்தேன்.
காலையில் அவனை காணவில்லை
எங்கேயோ போய்விட்டான்
என திரும்பினால்
மிதியடியை போர்த்திக்கொண்டு
மூலையில் முடங்கி கிடந்தான்.
அதை பார்த்த நொடியே
எனக்கு அவனை பிடித்துவிட்டது.

பக்கத்துவீட்டு அபி பாப்பா
அவன் ஏன்மா வொயிட்டா இருக்கான்
என கேட்க
அவன் பேரு வொயிட்டில
அதான் அப்பிடி இருக்கான்
என சொல்லியதிலிருந்து
அவன் பெயர் வொயிட்டி ஆனது.

அவனுக்கு சாப்பாடு வைக்காதிங்க
என்னையே விட மாட்டேங்குறான்
கோபித்துக் கொண்டார் ஹவுஸ் ஓனர்.

சில நாட்களில் பின் இரவுகளில் வரும்போது
பயங்கரமாய் குரைத்துவிட்டு
சாப்பாடு தட்டின் அருகே படுத்துக்கொள்வான்.
சாப்டுற நேரத்துல வெளில என்னடா வேல
தாமதமாய் வரும் போதெல்லாம்
திட்டிவிட்டு சாப்பிட அமரும்
தந்தையின் நினைவுகள் வந்து செல்லும்.

அசதியின் மிகுதியோ
பின் இரவு திரைப்படங்களின் சதியோ
சில வேலை நாட்களில்
எழுந்திருக்க மனமில்லாமல்
உறங்கும் போதெல்லாம்
காதருகே வந்து குரைத்தும்
கால்களுக்கிடையே குழைந்தும் எழுப்பிவிடுவான்.
பள்ளிநாட்களில் அதிகாலையில்
எழுப்பிவிடும் அம்மாவின் நினைவுகள்
தவறாமல் வந்து செல்லும்.

புதிதாய் ஒரு பூனைக்குட்டி
வந்தது அவனை போலவே..,
குட்டி என்பதால் அதன்மேல்
கரிசனம் மிகுந்தது.
அதை ஏற்றுக்கொள்ள முடியாமல்
சோகமாய் மூஞ்சியை தூக்கி வைத்துக்கொள்வான்.
விடுதியிலிருந்து திரும்பி வரும் அண்ணனை
அதிகமாய் கவனிக்கும் அம்மா மீது
நான் கொண்ட பொய் கோபம் நினைவினில் வரும்.

வெளியூர் சென்று திரும்பிவந்தால்
வேகமாய் வந்து தாவி கொள்வான்.
என்ன மாமா வாங்கிகிட்டு வந்திருக்க
என கட்டிக்கொள்ளும் கவியின்
நினைவுகள் வந்து செல்லும்.

அவனை உதாசினபடுத்துவது போல்
சில நாட்கள் நடந்துக்கொள்வேன்
சிணுங்கி கொண்டே செல்வான்.
நான் போரேன் என சொல்லிவிட்டு
போகாமல் நிற்கும்
யாழியின் நினைவுகள் வந்து செல்லும்.

என் கவலைகளை நான் பகிர்ந்துகொண்டால்
ஆறுதல் சொல்லாமல், அவமதிக்காமல்,
அறிவுரை கூறாமல் அப்படியே
ஏற்றுக்கொள்ளும் நண்பன் அவன்.

“இவன் கூட விளையாண்டா
மனசு ரிலாக்ஸ் ஆயிடுதுப்பா”
தினம் அவனுடன் விளையாடுவதற்காகவே
வந்து சென்ற ஹவுஸ் ஓனரின் வார்த்தைகள்.

இன்றும் வந்து செல்கிறார்
அவன் இல்லாத வெறுமையை
வெறித்து பார்த்த படியே...
ஒரு எதிர்பாராத விபத்தில்
இறந்துவிட்ட அவனின் நினைவுகளை
இந்த வெறுமையே எங்களுக்கு நினைவூட்டி செல்கிறது...

Thursday, 20 September 2012

இன்னும் ஒரு நாள்


ஐந்து பெண் குழந்தைகளுக்கு பிறகு
ஆறாவதாய் ஆண் குழந்தைக்கு முயற்சிப்பதாக
பக்கத்துவீட்டு மாமா சொன்னார்.
யான் பெற்ற சிற்றின்பம்
பெருக்க இவ்வையகம்
என நினைத்துவிட்டார் போலும்...

கடைகள் அடைக்கப்பட்ட மாநகர வீதியில்
பதறாமல், பரிதவிக்காமல்
பசியாற இளைப்பாறி நடந்தேன்
முதன்முறையாக...
கடந்து சென்ற
தாவணி கவிதை ஒன்றை
நீ அழகாய் இருக்கிறாய்
என சொல்ல துடித்து
தைரியம் இல்லாமல்
முடங்கி போனது மனது...

அங்க என்ன சார் பிரச்சனை என்றேன்
முஸ்லீம்ஸ் என ஒற்றை வார்த்தையில்
ஒரு இனப்படுகொலைக்கான
வித்தை விதைத்து சென்றார்
ஒரு காவல்துறை அதிகாரி.
முஸ்லீம்ஸ் எல்லாரும்
தீவிரவாதிகள் இல்லை சார் என்றேன்
ம்ம்... உன் பேர் என்ன என்றார்
மிரட்டல் தொனியுடன்
யோகி என்றேன் நான்.
அப்துல் கசாப் என்றிருந்தால்
தூக்கில் இட்டிருப்பாரோ...

தரை மீது படர்ந்ததும்
எனை தழுவி கொண்டது
பின் மதியத்து மயக்கம்.
என் பொழுதுகளை களவாடியது
எதுவென்று தெரியவில்லை.

யுவியின் சிக்சர் ஒரு நொடி
முகநூலில் நண்பனுக்கு லைக் மறுநொடி
அலைபேசியில் அக்காவின் நலம் அடுத்த நொடி
விளம்பர இடைவெளியில் திரைப்படம் மறுநொடி
என தடம் மாறி கொண்டிருந்த மனது
இந்த கவிதையை படைத்தது
எப்படி எனவென்றும் தெரியவில்லை.

இன்னுமொரு நாள் என
கழிந்த பொழுதில்
உருப்படியாய் செய்தது
இது ஒன்றை தான் என
இளைப்பாற சென்று விட்டது மனது
ஆனால் உறக்கம் மட்டும் வரவேயில்லை...

Wednesday, 19 September 2012

பொம்பள மனசு


முதல்முறையாக நான் எழுதும் கிராமத்து கவிதை...



விடிவெள்ளி முளைக்குமுன்னே,
ஆச ஒன்னு முளைச்சுடுச்சே...
கண்ணார அவன் அழக
காணாத என் மனசு
கண்டு ரசிக்க துணிஞ்சுடுச்சே...

கருப்பட்டி நெறத்தழகு
கன்னக்குழி சிரிப்பழகு
எண்ண வச்சு முடிச்சாலும்
மடியாத மீச அழகு
சேத்து வய லாண்டாலும்
சேறு படியாத கரவேட்டி அழகு
எத கண்டு வீழ்ந்தனு கேட்டா
நான் என்ன சொல்லுவேன்.

ஆடு ஓட்டி போகயில
வல ஒன்னு விரிச்சு வச்ச
சிறுபய சிரிப்பால...
சிக்கி தவிக்குது சிறுக்கி மனசு.
விளயாட்டா கூட விடுவிச்சாடத
விழுங்கிபுடும் விடலபுள்ள ஏக்கம்

வரப்புல தடுமாறி நீ நடந்தா
பதறி போகுது பாவி மனசு
ஓரமா நீ சிரிச்சு வச்சா
உசுர் நனைஞ்சு ஈரமாகுது
ஒத்தையில நான் படுத்தா
உன் நெனப்பு அங்க வந்து
எகத்தாளம் பண்ணி ஏகத்துக்கும் சிரிக்குது

போதுமய்யா....
பொருத்திருக்க முடியல
சேதி கேக்க ஓடிவாரேன்
எலகூட தூங்கி போன சாமத்துல...

ஓடி வந்த வேகத்த
ஓட ஒன்னு தடுத்துடுச்சே
சாதின்னு வேலி போட்டு
பாவி நெஞ்ச செதைச்சுடுச்சே

நெனப்புக்கு ஒருத்தன்
அணப்புக்கு இன்னொருத்தன்
இன்னும் எத்தன காலம் தான்யா
நோகும் இந்த பொம்பள மனசு...

Tuesday, 11 September 2012

சாத்தியம் தானா...?


முழுநிலவாய் முகம் இருக்க
எதையோ வெறிக்கும் விழிகள்,
எங்கெங்கோ தொட துடிக்கும்
சில நரிகளின் விரல்கள்,
வாஞ்சை பேச்சில்
வஞ்சிக்கும் வல்லூறுகள்...
எத்தனை போர்க்களமடா...

உன் எதிர்பாராத முத்தத்தில்
உயிர் வாழ்கிறேன்.
நீயும் ஏமாற்ற நினைத்தால்
நான் என்னாவேன்.
கசிந்துருகும் விழிநீரும்
திராவகமாய் நெஞ்சுக்குழி எரிக்கிறது.

பேருந்தில் சில கரப்பான்ப்பூச்சிகள்
சாலையில் சில சகதிகள்
வீதியில் சில எச்சங்கள்
உறவிலும் சில உரசல்கள்
அனைத்தையும் பொறுத்துக்கொண்டேன்
ஐந்து நிமிட சுகப்பொருளாய் நினைத்து
நீயும் என்னை அணைக்கும் வரை.

சதைக்கு அலையும் உலகில்
சாதிக்க சொல்கிறாய்
சாத்தியம் தானா...?
சொல் கண்ணே...
கட்டி அணைத்தால் – உன்
விரல்கள் மேயும் இடங்கள் எத்தனை...?

Sunday, 9 September 2012

INBOX


10 new messages received


மூன்றில் இரண்டு பங்கு செல்போன் வைத்திருக்கும் இந்தியர்கள்.
மூன்றில் ஒரு பங்கு கூட இல்லை வீட்டில் கழிவறை வைத்திருக்கும் இந்தியர்கள்.
அட அதிகாரிங்களா.., எங்களுக்கு இப்போ தேவ சுகாதாரம் தான்டா செல்போன் இல்ல...

தயவுசெய்து நண்பர்களே, அலுவலகத்தில் மட்டும் அல்ல துக்க வீடுகளிலும், மருத்துவமனைகளிலும் போனை சைலண்ட் மோட்லயே வைத்திருங்கள். நல்லது செய்ய முடியவில்லை என்றாலும் தீமையாவது செய்யாமல் இருக்கலாமே...

பதினாறாம் வாய்ப்பாடு வரை தலைகீழாய் ஒப்பித்தவன் நான், இன்று மளிகை சாமான் வாங்கிவிட்டு மீதி சில்லறையை சரிபார்க்க கால்குலேட்டர் அப்ளிக்கேசனில் முயற்சித்து கொண்டிருக்கிறேன்.

வடஇந்திய தோழி ஒருத்திக்கு நண்பன், ஒரு திருக்குறளை சொல்லி கொடுத்திருக்கிறான். அதை அவள் என்னிடம் நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று என மழலைத்தனமாய் சொல்லியதும் அத்தனை சந்தோசம் அவளுக்கு. அட இத்தனை நாள் நாம் இதை முயற்சித்ததே இல்லையே என தோன்றிவிட்டது.
( சரி நமக்கு எத்தன ஞாபகம் இருக்குனு சொல்லி பாத்தா 20 க்கு மேல ஞாபகம் வரல... தமிழ் தமிழ்னு பேசி என்ன ப்ரயோஜனம்...)

முன்பெல்லாம் வீட்டுக்கு வரேன்னு சொன்னா, இத வாங்கிட்டு வா அத வாங்கிட்டு வானு சொல்வாங்க இப்பலாம் ஒரே வார்த்த தான் புதுசா செல்போன் வாங்கிட்டு வா...

என் போனில் ANGRY BIRD விளையாண்டால் மற்றவர்கள் நான் ANGRY BIRD  ஆக மாறுவதை உணர்வார்களா...

நொடிக்கு ஒருமுறை உன் குறுஞ்செய்தியை
தேடிப் பார்க்கின்றன எந்தன் விரல்கள்.

இப்போதெல்லாம் நான் பூஸ்டர் பேக் போடுவதேயில்லை. 1900 க்கு PORT என்று ஒரு மெசேஜ் அனுப்பினால் அவர்களே நம்மை அழைத்து நமக்கு தேவையான பூஸ்டரை போட்டுவிடுகிறார்கள். ( அவர்கள் அழைக்கும் போது கொஞ்சம் கோபமாக பேசினால் நல்ல சலுகைகள் கிடைக்கலாம்...).

ஒரு அவசர பயணம் போனில் சார்ஜ் இல்லாமல் அணைந்துவிட்டது. என் வீட்டில், உறவுக்காரர்கள் என அனைவரும் முயற்சித்து இருக்கிறார்கள். இரவு வீட்டிற்கு வந்தது சார்ஜ் போட்டவுடன் அப்பாவின் அழைப்பு, நடந்ததை சொன்னதும் தான் நிம்மதி அடைந்தார்கள். இடைல எவனோ போட்டுவிட்ருக்கான் நான் ஏதோ ஒரு பொண்ண கூட்டிட்டு ஓடி போயிட்டேன்னு..., அவன தான் தேடிட்டு இருக்கேன்.  

மச்சி எங்கடா இருக்க...
நான் வடபழனில இருக்கேன் டா...
படத்துக்கு போலாம்னு சொன்னியே டா நான் உனக்காக இங்க மௌண்ட்ரோட்ல வெயிட் பண்ணிட்டு இருக்கேன்டா...
சாரி மச்சான் அப்பா அவசரமா வேல விட்டுட்டாரு டா...
பேசிக்கொண்டே வந்ததில் எதிரே வந்தவரை இடித்துவிட்டேன், சாரி கேட்க திரும்பினால் அசடு வழிய சிரிச்சுட்டு இருக்கான் நண்பன்.

Saturday, 8 September 2012

எனக்கிது புதிதில்லை


காத்திருப்பில் காயம் செய்கிறானடி தோழி
எனக்கிது புதிதில்லை என்ற போதினும்
நெஞ்சு நின்று துடிக்குதடி.
கணிணி திரை முன்னே
காட்சிப்பிழையாய் இருப்பவனும் அவனே
அலைப்பேசியில் அலைக்காமல்
கொஞ்சம் கொஞ்சமாய் கொல்பவனும் அவனே
முகநூல் இல்லையேல் அவனின்
முட்டைக்கண்விழி முகமும் முழுதாய் மறந்திருப்பேன்.
தூங்குபவன் போல் நடிப்பவனிடம்
எப்படி நான் தூது அனுப்புவேன் தோழி
கனவினில் அவன் வருவான் என காத்திருந்தேன்
ஆனால் கண்களை மூட மறந்துவிட்டேன் தோழி.
என்போல் பேதை உண்டோடி.
கவிதையில் அவன் வருவான் என எண்ணி
காகிதம் தேடி அலைகிறேனடி
காகிதம் இல்லையேல் கவிதை வாராதோ...
காரணம் கேட்காதேயடி தோழி – நான்
காதல் மதம் பிடித்து அலைகிறேன்.

நீலக் கடலருகே நுரை ததும்பும் கரையருகே
கால்களை நனைத்து  கண்ணன் நிற்பான்
நான் பின்வந்து அவனை அணைக்கும்
காட்சி நீள்கிறது முன்னே
நினைவு திரும்பினால் அவன் இல்லை
என்மேல் உனக்கு கருணையே இல்லையாடா
என் கண்ணா...