Wednesday, 19 September 2012

பொம்பள மனசு


முதல்முறையாக நான் எழுதும் கிராமத்து கவிதை...



விடிவெள்ளி முளைக்குமுன்னே,
ஆச ஒன்னு முளைச்சுடுச்சே...
கண்ணார அவன் அழக
காணாத என் மனசு
கண்டு ரசிக்க துணிஞ்சுடுச்சே...

கருப்பட்டி நெறத்தழகு
கன்னக்குழி சிரிப்பழகு
எண்ண வச்சு முடிச்சாலும்
மடியாத மீச அழகு
சேத்து வய லாண்டாலும்
சேறு படியாத கரவேட்டி அழகு
எத கண்டு வீழ்ந்தனு கேட்டா
நான் என்ன சொல்லுவேன்.

ஆடு ஓட்டி போகயில
வல ஒன்னு விரிச்சு வச்ச
சிறுபய சிரிப்பால...
சிக்கி தவிக்குது சிறுக்கி மனசு.
விளயாட்டா கூட விடுவிச்சாடத
விழுங்கிபுடும் விடலபுள்ள ஏக்கம்

வரப்புல தடுமாறி நீ நடந்தா
பதறி போகுது பாவி மனசு
ஓரமா நீ சிரிச்சு வச்சா
உசுர் நனைஞ்சு ஈரமாகுது
ஒத்தையில நான் படுத்தா
உன் நெனப்பு அங்க வந்து
எகத்தாளம் பண்ணி ஏகத்துக்கும் சிரிக்குது

போதுமய்யா....
பொருத்திருக்க முடியல
சேதி கேக்க ஓடிவாரேன்
எலகூட தூங்கி போன சாமத்துல...

ஓடி வந்த வேகத்த
ஓட ஒன்னு தடுத்துடுச்சே
சாதின்னு வேலி போட்டு
பாவி நெஞ்ச செதைச்சுடுச்சே

நெனப்புக்கு ஒருத்தன்
அணப்புக்கு இன்னொருத்தன்
இன்னும் எத்தன காலம் தான்யா
நோகும் இந்த பொம்பள மனசு...

Tuesday, 11 September 2012

சாத்தியம் தானா...?


முழுநிலவாய் முகம் இருக்க
எதையோ வெறிக்கும் விழிகள்,
எங்கெங்கோ தொட துடிக்கும்
சில நரிகளின் விரல்கள்,
வாஞ்சை பேச்சில்
வஞ்சிக்கும் வல்லூறுகள்...
எத்தனை போர்க்களமடா...

உன் எதிர்பாராத முத்தத்தில்
உயிர் வாழ்கிறேன்.
நீயும் ஏமாற்ற நினைத்தால்
நான் என்னாவேன்.
கசிந்துருகும் விழிநீரும்
திராவகமாய் நெஞ்சுக்குழி எரிக்கிறது.

பேருந்தில் சில கரப்பான்ப்பூச்சிகள்
சாலையில் சில சகதிகள்
வீதியில் சில எச்சங்கள்
உறவிலும் சில உரசல்கள்
அனைத்தையும் பொறுத்துக்கொண்டேன்
ஐந்து நிமிட சுகப்பொருளாய் நினைத்து
நீயும் என்னை அணைக்கும் வரை.

சதைக்கு அலையும் உலகில்
சாதிக்க சொல்கிறாய்
சாத்தியம் தானா...?
சொல் கண்ணே...
கட்டி அணைத்தால் – உன்
விரல்கள் மேயும் இடங்கள் எத்தனை...?

Sunday, 9 September 2012

INBOX


10 new messages received


மூன்றில் இரண்டு பங்கு செல்போன் வைத்திருக்கும் இந்தியர்கள்.
மூன்றில் ஒரு பங்கு கூட இல்லை வீட்டில் கழிவறை வைத்திருக்கும் இந்தியர்கள்.
அட அதிகாரிங்களா.., எங்களுக்கு இப்போ தேவ சுகாதாரம் தான்டா செல்போன் இல்ல...

தயவுசெய்து நண்பர்களே, அலுவலகத்தில் மட்டும் அல்ல துக்க வீடுகளிலும், மருத்துவமனைகளிலும் போனை சைலண்ட் மோட்லயே வைத்திருங்கள். நல்லது செய்ய முடியவில்லை என்றாலும் தீமையாவது செய்யாமல் இருக்கலாமே...

பதினாறாம் வாய்ப்பாடு வரை தலைகீழாய் ஒப்பித்தவன் நான், இன்று மளிகை சாமான் வாங்கிவிட்டு மீதி சில்லறையை சரிபார்க்க கால்குலேட்டர் அப்ளிக்கேசனில் முயற்சித்து கொண்டிருக்கிறேன்.

வடஇந்திய தோழி ஒருத்திக்கு நண்பன், ஒரு திருக்குறளை சொல்லி கொடுத்திருக்கிறான். அதை அவள் என்னிடம் நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று என மழலைத்தனமாய் சொல்லியதும் அத்தனை சந்தோசம் அவளுக்கு. அட இத்தனை நாள் நாம் இதை முயற்சித்ததே இல்லையே என தோன்றிவிட்டது.
( சரி நமக்கு எத்தன ஞாபகம் இருக்குனு சொல்லி பாத்தா 20 க்கு மேல ஞாபகம் வரல... தமிழ் தமிழ்னு பேசி என்ன ப்ரயோஜனம்...)

முன்பெல்லாம் வீட்டுக்கு வரேன்னு சொன்னா, இத வாங்கிட்டு வா அத வாங்கிட்டு வானு சொல்வாங்க இப்பலாம் ஒரே வார்த்த தான் புதுசா செல்போன் வாங்கிட்டு வா...

என் போனில் ANGRY BIRD விளையாண்டால் மற்றவர்கள் நான் ANGRY BIRD  ஆக மாறுவதை உணர்வார்களா...

நொடிக்கு ஒருமுறை உன் குறுஞ்செய்தியை
தேடிப் பார்க்கின்றன எந்தன் விரல்கள்.

இப்போதெல்லாம் நான் பூஸ்டர் பேக் போடுவதேயில்லை. 1900 க்கு PORT என்று ஒரு மெசேஜ் அனுப்பினால் அவர்களே நம்மை அழைத்து நமக்கு தேவையான பூஸ்டரை போட்டுவிடுகிறார்கள். ( அவர்கள் அழைக்கும் போது கொஞ்சம் கோபமாக பேசினால் நல்ல சலுகைகள் கிடைக்கலாம்...).

ஒரு அவசர பயணம் போனில் சார்ஜ் இல்லாமல் அணைந்துவிட்டது. என் வீட்டில், உறவுக்காரர்கள் என அனைவரும் முயற்சித்து இருக்கிறார்கள். இரவு வீட்டிற்கு வந்தது சார்ஜ் போட்டவுடன் அப்பாவின் அழைப்பு, நடந்ததை சொன்னதும் தான் நிம்மதி அடைந்தார்கள். இடைல எவனோ போட்டுவிட்ருக்கான் நான் ஏதோ ஒரு பொண்ண கூட்டிட்டு ஓடி போயிட்டேன்னு..., அவன தான் தேடிட்டு இருக்கேன்.  

மச்சி எங்கடா இருக்க...
நான் வடபழனில இருக்கேன் டா...
படத்துக்கு போலாம்னு சொன்னியே டா நான் உனக்காக இங்க மௌண்ட்ரோட்ல வெயிட் பண்ணிட்டு இருக்கேன்டா...
சாரி மச்சான் அப்பா அவசரமா வேல விட்டுட்டாரு டா...
பேசிக்கொண்டே வந்ததில் எதிரே வந்தவரை இடித்துவிட்டேன், சாரி கேட்க திரும்பினால் அசடு வழிய சிரிச்சுட்டு இருக்கான் நண்பன்.

Saturday, 8 September 2012

எனக்கிது புதிதில்லை


காத்திருப்பில் காயம் செய்கிறானடி தோழி
எனக்கிது புதிதில்லை என்ற போதினும்
நெஞ்சு நின்று துடிக்குதடி.
கணிணி திரை முன்னே
காட்சிப்பிழையாய் இருப்பவனும் அவனே
அலைப்பேசியில் அலைக்காமல்
கொஞ்சம் கொஞ்சமாய் கொல்பவனும் அவனே
முகநூல் இல்லையேல் அவனின்
முட்டைக்கண்விழி முகமும் முழுதாய் மறந்திருப்பேன்.
தூங்குபவன் போல் நடிப்பவனிடம்
எப்படி நான் தூது அனுப்புவேன் தோழி
கனவினில் அவன் வருவான் என காத்திருந்தேன்
ஆனால் கண்களை மூட மறந்துவிட்டேன் தோழி.
என்போல் பேதை உண்டோடி.
கவிதையில் அவன் வருவான் என எண்ணி
காகிதம் தேடி அலைகிறேனடி
காகிதம் இல்லையேல் கவிதை வாராதோ...
காரணம் கேட்காதேயடி தோழி – நான்
காதல் மதம் பிடித்து அலைகிறேன்.

நீலக் கடலருகே நுரை ததும்பும் கரையருகே
கால்களை நனைத்து  கண்ணன் நிற்பான்
நான் பின்வந்து அவனை அணைக்கும்
காட்சி நீள்கிறது முன்னே
நினைவு திரும்பினால் அவன் இல்லை
என்மேல் உனக்கு கருணையே இல்லையாடா
என் கண்ணா... 

Friday, 31 August 2012

INBOX


10 new messages received

குறுஞ்செய்தியை ரசிக்கும்
எல்லா பெண்களும்
அழகாகவே தெரிகிறார்கள்...



உன்னை நினைத்தவுடன்
சிணுங்குகிறது என் அலைபேசி...
இது என்ன டெலிபதியா...
இல்லை செல்விதியா..



உன் குறுஞ்செய்திக்காக
காத்திருக்கும் சமயங்களில்
FORWARD MESSAGE அனுப்பும்
நண்பன் மட்டும் கைல கிடச்சான்...



முகநூலும்அலைபேசியும் வந்த பிறகு
சங்க இலக்கியத்திலிருந்து
தூது என்ற வகையையே எடுத்துவிட்டார்களாம்....
-தமிழ் ஐயாவின் புலம்பல்.



செல்போன் டவர்களின் அதிக கதிர்வீச்சால் சிறு பறவையினங்கள் அழிந்துவிட்டன.     –செய்தி
அட போங்கயா... ஈழத்துல எங்க இனம் அழிஞ்சதுக்கே நாங்க கவலபடல...




UNKNOWN நம்பர்ல இருந்து கால் வந்தாலே எடுப்பதில்லை...
ப்ராஜக்ட் காலோ என்ற பயம்...



சீனாவில் பிரபல எழுத்தாளர்களின் நாவல்களை SUBSCRIBE செய்து கொண்டால் தினம் ஒரு பகுதி குறுஞ்செய்தியாக வந்து சேர்கிறது...



செல்போன் கண்டுபுடிச்சவந்தாயா உலகத்துக்கே சாமிஉச்சக்கட்ட போதையில் நண்பனின் பகுத்தறிவு தத்துவம்...



ஒன்னாம் தேதி காலையில்
மச்சான் இன்னைக்கி ட்ரீட் வைடா...
ஏன்டா...
அதான் BULK SMS தடைய நீக்கிட்டாங்கள....



WRONG CALL வந்தாலும் மொக்கை போடும் பழக்கம் எனக்கு உண்டு...
ஹாய் சுதாகர்...
ம்ம்.. நீங்க...
என்னடா இன்னும் தூக்கமாநைட் படம் பார்த்தியா...
ஆமா...
மன்னிக்கவும் எழுத முடியாத அளவிற்கு BAD WORDS…
சிறிது சமாளிப்பிற்கு பின் செல்லமாய் கொஞ்சம் கொஞ்சல்கள்... அப்படியே பேச்சு நீண்டது...
திடீரென நீ யாருனு நினைச்சுகிட்டு என்ட பேசிட்டு இருக்க...
திவ்யா தானே இல்ல இல்ல ப்ரியா....
CALL END
யார் காதலுக்கோ சுபம் போட்ட சந்தோசம்...

Thursday, 30 August 2012

காவிரி


கைவிரி கோலமாய்
இன்று எங்கள் காவிரி.

அவளின் மடியெங்கும்
கானலின் நீரோட்டம்.

ஈழ தமிழச்சியாய்
நிர்மூலமாகி நிற்கிறாள்.

ரகசியங்கள் அழிந்து
ராப்பிச்சை கேட்கிறாள்.

ஆவணி தாண்டியும் இனிக்கவில்லை
ஆடி பெருக்கு விழா.

நீருக்கடியில் நினைவிழக்கும் இன்பம்
வாய்க்கவில்லை என் தம்பிகளுக்கு...

முதிர்க்கன்னி காதலாய்
ஏங்கி நிற்கிறது வயல்வெளி.
பருவம் தப்பியாவது
பெய்யுமா பருவமழை என்று...

மழைநீரை தேக்கி வைக்கும்
மணல்வெளியும் மிஞ்சவில்லை
எச்சத்தையும் விழுங்கும்
நரிகள் கூட்டத்தால்...

நாற்றுகளுக்கிடையே நடனமாடும்
பருவ காற்று தேடி செல்கிறது
இழந்த சலங்கை ஒன்றை தேடி
குடகு மழை நோக்கி...

பிருந்தாவன் பூங்காவின்
எச்சத்தையாவது தாருங்கள்
எங்கள் பசிபூங்காவினை
கொஞ்சம் இளைப்பாற்றிட...

என்று வருவாய் எங்கள் தேவி...

Sunday, 26 August 2012

மழை நினைவு


உன்னை நினைக்கவே
என்னை நனைக்குது மழை...

துளிர் விடும் இலை போல்
தளிர் விட்டு பார்க்கிறது
நீயும் நானும்
விரல் கோர்த்த படி
வீதியில் நனைந்த ஒரு மழைதினம்.

உன்னையும் என்னையும் நனைத்த
மழைத்துளி எங்கே என்கிறாய்,
பதில் சொல்ல தெரியாமல்
நானும் தேடி பார்க்கிறேன்.

அடைமழையில்
அடைக்காக்கும் காகம் போல
போர்வைக்குள் நீயும் நானும்...

மழைக்கால இரவின்
தேனீர் இதமாய்
உன் இதழ் முத்தம்...

இலையில் தேங்கி
வழியும் நுனிநீர் போல
இமையில் கசியும்
சிலதுளி விழிநீர்...

மழை நின்றபின் நிசப்தமாய்
பிரியும் நொடியில்
உன் மௌணங்கள்....