Friday, 18 May 2012

யாழிக்கு கவிதைகள்



மெலிதாய் எனது
காதலை வெளிப்படுத்தினேன்
உனது வலது காலணியுடன்
எனது இடது காலணி
உனது இடது காலணியுடன்
எனது வலது காலணி

நீ அதை மறுத்ததும்
புரிந்தது எனக்கு..
எனது காலணிகளை தனியாகவும்
உனது காலணிகளை தனியாகவும் வைத்து
நடுவில் உனது
தந்தையின் காலணிகளை வைத்தபோது...

கவிதை கதை


காதல் வேறு
காமம் வேறு..
காதல் வேறு
நட்பு வேறு..

ஆண் பெண் பேசுவதே
தவறாகும் தேசத்தில்
நட்பு என்ன..?
உறவு என்ன..?
காதல் என்ன..?
கத்திரிக்காய் என்ன..?

கண்கள் சுழற்சி..
வயதின் கவர்ச்சி..
ஹார்மோன் கிளர்ச்சி..
மனதின் வீழ்ச்சி..
எகிறும் உணர்ச்சி..
காதல்.

தினமும் கண்கள்
காண விரும்பும் காட்சி
அவள் முகமே..

அன்பின் எல்லை நட்பு..
நட்பின் எல்லை காதல்..
காதலின் எல்லை காமம்..
காமத்தின் எல்லை..

எல்லைகள் விரிந்தாலும்
எல்லை தாண்டிய
பயங்கரவாதம்
எல்லா நிலைகளிலும்..

முதல் பார்வை
பார்வையில் பரவசம்
ஆதலால் பழக்கம்

சின்னதாய் பேச்சு
கண்களில் வீச்சு
மனம் மாறியாச்சு
இருவருக்குள்ளும் என்ன ஆச்சு?

நட்பின் எல்லையை
விரைவில் அடைந்தாலும்
கடக்க முடியவில்லை
மனதின் குழப்பத்தால்..

நட்பு
மெள்ள மெள்ள
நகர்ந்து
காதலுக்குள் நுழைவதை
ஏன் எவரும்
ஏற்க மறுக்கின்றனர்..?

ஊர் ஏசுமோ..?
உறவுகள் ஏசுமோ..?
ஆயிரம் ஆயிரம் தயக்கம்
காதலை சொல்ல..

காதலில் நட்பு இருக்கலாம்- ஆனால்
நட்பில் காதல் இருக்கக்கூடாது.
விந்தை உலகம் இது..

அவளிடம்
சக மாணவன் பிறந்தநாளில்
தன் காதலைக் கூற
கொண்டாட்டம் அடங்கியது
அவள் விட்ட அறையில்..

பல முறை
பல சந்தர்ப்பங்களில்
பல கோணங்களில்
சிரிக்க சிரிக்க
அவள் விவரித்ததை
எப்படி மறக்க முடியும்..?

அவன் காதலிக்கிறான்
ஆனால் அவள்.?

அவளும் காதலிக்கிறாள்
உருகுகிறாள்
அன்பு பாராட்டுகிறாள்
அவனை போலவே
தயங்குகிறாள்
யோசிக்கிறாள்
தவிக்கிறாள்

அவன் விடுபடுவதாய்
தெரியவில்லை
தவிப்பின் சிறையிலிருந்து..
இவள் போட்டு உடைத்தாள்
இன்னும் எத்தனை நாள் தான்
உன்னை நானும்
என்னை நீயும்
ஏமாற்றிக்கொண்டே
இருக்க போகிறமோ..?

காதலை சொல்ல
புரிதலை சொல்ல
இதைவிட சிறந்த வரிகள்
இருப்பதாய் தெரியவில்லை அவளுக்கு..

அவள் சொன்னதும்
அவன் அங்கம் புகுந்தது வெட்கம்.
வெட்கம் இயல்பானது தான்
ஆனால் அதை
பெண்ணுடமையாக்கி
போக்குக் காட்டிவிட்டது சமூகம்.

வேதனைக்கும்
தவிப்பிற்கும்
இன்று தான் விடுதலை என்றான்.

ஆசையாய் கேட்டான்
திருமணம் எப்போது..?

அதற்குள் அவனது
எண்ண ஓட்டம்
அவளின் பதிலை நோக்கி
பதிலின் பொருளை நோக்கி..

இப்பவே என்றால்
நம்மீது சந்தேகம்
என்று எண்ண தோன்றும்

கொஞ்ச நாள்
சென்ற பிறகு என்றால்
நண்பனா.. OK
ஆனா லவ்வரா..
யோசிப்பதாய் தோன்றும்..

பிறர் மனதை புரிந்து
வலிகள் இல்லா
வேதனையில்லா
வார்த்தைகள் தருபவர்
கடவுளுக்கு நிகரானவர்.

அவள் கூறினாள்
எப்ப வேண்டுமென்றாலும்..

வீடு என்ன
உலகமே எதிர்த்தும்
திருமணம் செய்தார்கள்
பதிவு அலுவலகத்தில்..

அவள் முடிவு செய்தாள்
பையனோ..
பொண்ணோ..
காதல் மட்டும் வேண்டாம்
ஆல்பத்தை புரட்டும்
அல்ப சந்தோசம் கூட கிடைக்காது
என்று கூறி காதலை தடுக்க..

இப்படி ஓர் பிறப்பு


நான் பிறப்பதற்கு முன்பே சுவையாகிவிட்டது என் வாழ்க்கை. நான் உருவாகிய போதே, ஏற்கனவே இரண்டு ஆண் குழந்தைகள் இருந்ததால் என்னை கலைக்க திட்ட்மிட்டுவிட்டார்கள். பொம்பள புள்ளையா இருந்தாலும் இருக்கும் கலைக்க வேணாம்னு எங்க அப்பாயி (அப்பாவோட அம்மா) தான் சொன்னுச்சாம்.. அதனால ஒரு அழகான ஜுலை மாதம் 4-ம் நாள் அன்று பிறந்தேன்...

பிறந்தது ஆண் குழந்த என்ன பண்றது வளர்க்க ஆரம்பிச்சுட்டாங்க.. அவங்க ஆசை பட்ட மாதிரி நான் பிறக்காததால என்ன ஆசையா அவங்க வளர்க்கல.. அதுக்காக அப்பவே நான் வருத்தபடல.. பசிச்சா கூட அழுக மாட்டேனாம்.. கை சப்பிக்கிட்டே படுத்து இருப்பேனாம்.. இப்பவும் அப்படி தான் யாராவது சாப்பிட கூப்பிட்டாதான் சாப்பிடவே தோணும்.. தனியா சாப்பிட பிடிக்காது..


பிறக்கிறதுக்கு முன்னாடியே இப்படி யோசிச்சு பிறந்ததாலயோ என்னவோ, எந்த ஒரு விசயத்துலயும் ஒரு தெளிவான முடிவு எடுக்க முடியாம குழம்பி போயிடுறேன். அந்த மாதிரி சமயங்களில் எனக்கு உதவுவது டாஸ் போட்டு பாக்குறது தான்.. சிவாஜி படத்துல ரஜினி சார் பண்றத பார்த்துட்டு எனக்கும் அந்த பழக்கம் தொத்திக்கிச்சு. அதுக்காகவே ஒரு ஒரு ரூபாய் காயின் ஒன்னு பையிலியே வைச்சிருப்பேன். அந்த காயின் எனக்கு POUL  ACTOPUS  மாதிரி சரியான முடிவத்தான் கொடுத்திருக்கு..

ஆனா சென்னையில கழிஞ்ச மோசமான நாட்கள்ல அந்த காயின செலவு பண்ணாம பாதுகாக்கிறதே ஒரு போராட்டமா போச்சு.. ஒரு மிக மோசமான நாள்ல் பேருந்து பயணச்சீட்டிற்காக அத செலவழிச்சதும் வேதனை.. ஒரு காயின்காக அன்னைக்கி நான் நிரம்ப வருத்தப்பட்டுட்டேன். அதுக்கு பிறகு எந்த காயினும் வச்சுகிறது இல்ல, கைல கிடைக்கிறத வச்சு முடிவு எடுத்துகிறேன்.


நான் ரொம்ப வருத்தபடும் நாட்கள்.., என் சோகமான நாட்கள்.. என்ன யாராவது திட்டும் போது எங்க அப்பாயி பக்கத்துல இருந்துச்சுனா..

“என்ன அன்னைக்கே கலைச்சிருந்தா எனக்கு இதெல்லாம் நடந்து இருக்காது-ல, கிழவி எல்லாமே உன்னால தான்” னு திட்டுவேன். என்ட அதிகமா திட்டு வாங்கினது கிழவியா தான் இருக்கும், பாவம் கிழவி சாகறதுக்கு முதல் நாள் கூட திட்டு வாங்கினுச்சு..

“யாரு கண்டா.. நீ பொட்ட புள்ளயா பிறந்து என் புள்ளைக்கி சோறாக்கி போடுவனு நினைச்சேன்.. இப்படி ஆம்பள புள்ளயா பிறந்து கேள்வி கேப்ப னா.. நினைச்சேன்.. “ இப்படி சில சமயமும்..,

“போடா-னு ஆரம்பிச்சு வாய்க்கு வந்தபடி எல்லாம் வசவு பாடியும்..,”

எதுவுமே பேசாம என் கருத்த ஏத்துக்கிற மாதிரி அமைதியாவும் சில சமயம் அதன் பதில் இருக்கும்..


 சரி பிறந்துட்டேன்.., எனக்கு பேரு வைக்கணுமே.. அதுல ஒரு பெரிய காமெடியே பண்ணிருக்காங்க..

நான் பிறந்த சில தினங்களுக்கு பிறகு இலங்கை அரசவையில் ஈழ தமிழர்கள் பொன்னம்பலம், யோகேஷ்வரன் என்ற இருவரும் தேர்தலில் நின்று வெற்றி பெற்று அமைச்சர்களாக பதவியேற்றனர்.

எங்க மாமாட்ட என்ன கொடுத்து எனக்கு பெயர் வைக்க சொல்லிருக்காங்க எங்க அம்மா. அந்த அமைச்சர்களின் ஞாபகமா பொன்னம்பலம் னு வைக்க சொல்லியிருக்கார்.

உன்ட போயி கேட்டேன் பாருனு தலையில அடிச்சுக்காத குறையா எனக்கு எங்க அம்மா யோகேஷ்வரன் னு வச்சிருக்காங்க..

அவர் சொன்ன பேர் வைக்கலன்ற கோபமோ என்னவோ, இன்னைக்கி வரைக்கும் என் பேர் சொல்லி அவரு கூப்பிட்டதேயில்ல..

மகேஷ்வரன், கமலேஷ்வரன், யோகேஷ்வரன்.. ஈஷ்வரன்லயே முடிஞ்சதால அதுவே நிலைச்சுடுச்சு..

அதுவும் SCHOOL-ல JOIN பண்ற வரைக்கும் தான்.. ALPHABETICAL ORDER ல வரும் போது என் பேரு கடைசியா வந்ததால பாலச்சந்தர் னு மாத்தி வச்சுட்டார் எங்க அப்பா..

குடித்துவிட்டு தாமதமாய் வரும் அப்பாவிற்காக காத்திருக்கும் அம்மாவின் மடியில் உறக்கம் வராத பல இரவுகளில் சலிக்காமல் கேட்ட கதை இது...

Wednesday, 16 May 2012

நீ இருந்தாய்..


உன் சிறுமுதல் பார்வையால்
முதல் மழை என் மனதில்..

இதுவரை யாரையும்
காதலித்தது இல்லை என்றாய்...
முதல்முறையாக உன்னை
காதலிக்கத் தொடங்கினேன் நான்..

நீயும் நானும்
எதிர்பாராத நொடியில்,
சொல்லிவிட்டேன் என் காதலை..

பொறுத்திருக்க சொன்னாய்..
நான் உன்னை
வெறுத்திருந்தேன்..

காத்திருக்க சொன்னாய்..
நான் கரைந்து போய் நின்றேன்..

சின்னச்சின்னதாய்..
முத்தங்கள் தந்து,
அப்படியே அணைத்து நின்றாய்..
என் கோபங்கள் மறைந்து
உறைந்து நின்றேன்..

அறை மனதாய்..,
மனதை அடக்கம்
செய்ய சொன்னாய்..
அடுத்த வினாடியே
உன்னை நினைத்தேன்..

நீ எனக்கில்லை..
நீ எனக்கில்லை என்றாய்..
என் காதலை
வளர்த்துக் கொண்டே
சென்றேன் நான்..


உன்னுடன் வாழ்ந்த
நினைவுகள் போதும்
நண்பா என்கிறாய்..
சிரிப்பதா.. அழுவதா..
என தெரியாமல்
இரண்டையும் செய்துவிட்டு
பிரிகிறேன் நான்..

நீ இருந்தாய்
அது போதும்...

Friday, 11 May 2012

இரவு


அர்த்த ராத்திரியில்
அர்த்தமற்று வீதிகளில் திரிவது
எனக்கு பிடித்திருக்கிறது..

திடுக்கிட்டு விழித்து
குறைத்த நாய்களும்,
இன்று எனக்கு துணையாக
நகர்வலம் வருகிறது..

எனக்கென்று இருக்கும்
இந்த தனிமையில்
எனை கேள்வி கேட்க யாருமில்லை...

காதலியின் கண்ணீர் துளிகள் இல்லை..
நட்பின் நச்சரிப்பு இல்லை..
உறவின் உருத்தல் இல்லை..
துளி நீரில் இமை எரிக்கும்
நினைவுகள் இல்லை..
நான் எடுத்து வைக்கும்
ஒவ்வொரு அடியிலும்
புனிதமடைகிறேன்..
மனிதம் அறிகிறேன்..

என் இரவுகளில் பல- இப்படியே
கடந்தும் கலைந்தும்
செல்கின்றன..
காரணமும் தெரியவில்லை..
கவிதையும் புரியவில்லை.. –ஆனால்
அர்த்த ராத்திரியின்
அசட்டுதனங்கள் மட்டும் குறையவேயில்லை..

Wednesday, 9 May 2012

யாழிக்கு கவிதைகள்


உன்னுடன் பகிர்ந்துக் கொள்ளப்படாத
என் நினைவுகள் எல்லாம்
தரை எங்கும் சிதறி கிடக்கின்றன..
ஆனி மாதத்து வேப்பம் பூக்களாய்...

என்றாவது ஒரு நாள்
நீ என்னை நலம் விசாரிப்பாய்
என்ற நினைவே
என்னை சிதைத்துவிடுகிறது..

உன்னிடம் நான் எதையும்
எதிர்ப் பார்க்கவில்லை...
உன்னையே எதிர்ப் பார்த்து காத்துகிடக்கிறேன்..

உன்னிடம் நான் பேசமாட்டேன்
ஆனால் என் நினைவுகள்
என்றாவது உன்னை அணைக்கும்..
அன்று என்செய்வாய் அன்பே..
அதுவரை காத்திருக்கிறேன்.

என்று வேண்டுமானாலும்
திரும்பி வா..
நான் காத்திருப்பேன்..
ஆனால் நான் உன்னையே
நினைத்து இருப்பதால்
என் உயிர் என்னிடம் இருக்குமா
என்பது மட்டும்
எனக்கு தெரியாது அன்பே...

நட்பு



எங்க வீட்டு மாடியில் படுத்து, வானத்தை பார்த்து இரவினை கழிப்பது என்பது, எனக்கு என் தாயின் மடியில் படுத்து கதைகள் கேட்கும் தருணம் போன்றது. பல சமயங்களில் நான் கவிதை என்ற பெயரில் கிறுக்க தொடங்கியதும் அங்கே தான்..

முகநூலை அனைத்து விட்டு புரண்டு படுத்த தருணம், மெலிதாய் எட்டி பார்த்தது ஒரு நினைவு. இங்க தானே அரவிந்த், தினேஷ் ரெண்டு பேரும் படுத்து இருந்தானுக, எத்தனை சந்தோசம் அன்றைய இரவு. லேசாய் சிரித்தும் கொண்டேன் அதற்கு அடுத்த நாள் நடந்தவற்றை நினைத்து...


வானத்தை பார்த்தால் முழு நிலவும் எண்ணிலடங்கா நட்சத்திரங்களும் இரவை பகலாக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன.. மனதில் சின்ன ஆசை ஒன்று தோன்றியது அந்த நிலா போல நானும், நட்சத்திரங்களை போல என் நண்பர்களும் என்றும் என்னை சுற்றி இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் என்று..

இந்த உலகத்துல நான் பெருசா எதுவும் சாதிக்கல.., ஆனா எனக்கு கஷ்டம் வந்தப்ப எல்லாம் நான் கேட்காமலேயே எனக்கு உதவுற நண்பர்கள் எனக்கு கிடைச்சிருக்காங்க.. எனக்கு அது போதும் என்று அன்பு ஒரு இரவில் சொல்லியதும் இதயம் வருடி போனது அந்த நொடியில்...

பிறந்தவுடன் ஆரம்பம் ஆனதா.., இல்லை தவழ தொடங்கியதும் தொடங்கியதா.., இல்லை மழலை மொழியில் உறவாடிய உடன் என் நட்பும் முகேஷ் உடன் உறவாடியதா.. தெரியவில்லை, இன்று வரை தொடர்கிறது...


மதிய நேரத்து ஊரணி குள குளியல், சனி கிழமைகளில் புது ஆற்றில் குளியல், இடைவெளிவிடாத க்ரிக்கெட், இடைவேளைகளில் இனகவர்ச்சி காதல், திருட்டு தம் அடிக்க இருட்டும் வரை காத்திருத்தல், புகை வாடையை மறைக்க புளிய மர இலைகளை உதட்டிலும், விரல்களின் இடுக்கிலும் தேய்த்துக்கொண்ட அறிவியல், சொல்லாமலேயே கடந்து சென்ற அவனின் கண்மணி காதல்,அடுத்த வருடம் குழந்தையுடன் அவள் முகேஷ் நல்லா இருக்கியா..? என கேட்ட போது பதில் சொல்ல முடியாதநிலை என எவ்வளவு அழகான நாட்கள் டா நண்பா.. அது..


நட்பும், காதலும் எங்கே எப்படி உருவாகும் என்று கண்டுப்பிடித்து கூறும் அளவிற்கு விஞ்ஞானம் இன்னும் வளரவில்லை.. ஒருத்தரை பார்த்ததும் பிடித்து விடுகிறது, அவரிடம் உள்ள நல்ல குணங்களை மட்டும் பார்த்து வளர்வது காதல்.. சரியான நேரத்தில் நம் தவறை உணர்த்தி நம்மை திருத்துவது நல்ல நட்பு...

நான் டைட்டானிக் கதை (கதை... சரி விடுங்க.. சில பல முக்கியமான scenes)  சொல்லும் அழகை பார்த்து வளர்ந்தது நட்பு G.K.வினோத்துடன்...
முதன்முறையாக என்னை பற்றிய விஷயங்களை பகிர்ந்து கொண்டு, தினந்தினம் புதிது புதிதாய் கதைகள் பேசி பழக ஆரம்பித்தோம்.. பருவத்தில் ஏற்படும் மாற்றம் முதல் பக்கத்து வீட்டு ஆன்டி வரை பேசாத விஷயங்கள் இல்லை.. என் முதல் காதலுக்காக (சரியா தெரியலங்க அப்படி தான் நினைக்கிறேன்..) நிறைய ADVICE பண்ணான். ஆனா நான் அவனை விட அவள ரொம்ப நம்பினேன், ஏமாற்றம் தான் கிடச்சது.. அதுக்காக நான் யாரையும் குறை சொல்ல விரும்பல..

எங்கள மேலும் நெறுக்கம் ஆக்கினது கிரிக்கெட்.. ஊர்ல விளையாடும் போது நான் OPENING BATSMAN, ஆனா என்ன BOWLING போட வச்சு காமெடி பண்ணி.. அதனால சில பல மேட்ச் வின் பண்ணி.. உன்ன என்னால மறக்கவே முடியாது நண்பா...


ராஜராஜன்... ஒரு நாள் ரொம்ப பவ்யமா பக்கத்துல உட்கார்ந்து


நீ ஆலக்குடியா..? இல்ல பூதலூரா..னு கேட்டான்..


பூதலூர் டா ஏன் கேக்குற.. னு நான் கேட்டேன்..


இல்ல ராதிகாவ தெரியுமா..? தயங்கி தயங்கி கேட்டான்..


நல்ல தெரியும் டா.. அவ என் FRIEND தான் டா.. ஏன் டா அவட்ட எதுவும் பிரச்சனையா..


அவள எனக்கு பிடுச்சிருக்கு டா...


டேய்.. என்ன டா சொல்ற.. சரி விடு நான் அவட்ட சொல்லிக்கிறேன்.. னு சாதாரணமா அப்ப சொல்லிட்டேன்.. பின்னடி தான் தெரிஞ்சது அது எவ்ளோ பெரிய கஷ்டமான வேலைனு..


நான் அவன் காதல சொல்ல போனா அவ அவ காதல தூக்கிக்கிட்டு என்ட வரா.. நான் பேச ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி அவ புயல் அடிக்கிற மாதிரி ஆரம்பிச்சு, அழுது, என்னயும் அழ வச்சு, என்ன பேசவே விடாம அப்பிடியே போயிட்டா.. அது காதல்னு எனக்கு அப்ப புரியல.. திரும்ப அவளுக்காக காத்திருந்தேன் எப்படியாச்சும் ராஜா லவ்வ சொல்லிடனும்னு.. வாய்ப்பே கிடைக்கல..


இப்பவும் ட்ரையின் ல போகும் போது SECOND CARRIAGE 16 NUMBER SEAT பாத்தா அவ ஞாபகம் வராம இருக்காது.. அவ எப்பவும் உட்காற SEAT NUMBER தான் அது..


ஒரு முக்கோண காதல் கதையா.. நட்பின் முகம் உடைச்சு போச்சு.. புரியாத பறுவக்காதல்.. அவன் காதலை சொல்லாதத்திற்க்காக ராஜாவிடமும், அவளின் காதலை புரிந்துக்கொள்ளாதத்திற்காக ராதிகாவிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்..


என் தமிழ் ஆசான் திரு.ஐ.ஆரோக்கிய சாமி ஐயா.. தமிழை ஒரு காதலியை ரசிப்பது போல எனக்கு ரசிக்க கற்றுக்கொடுத்தார். கவிதைகள் மேல் நாட்டம் வர ஆரம்பித்தது.. குமுதத்தில் வரும் கவிதைகளையும், கதைகளையும் வாசித்து வந்து ஒரு மேடைப் பேச்சாளனிடம் பகிர்ந்து கொள்வேன்.. பள்ளி முடிந்தவுடன் அவன் நட்பும் முடிந்து இருந்தது.. ஒரு நண்பர்கள் தினத்தன்று


ஹாய்.. டா.. கோபால் எப்படி இருக்க..? என கேட்ட போது


டேய்.. பாலா.. எப்படி டா.. என் நம்பர் கிடச்சது, எப்படி டா.. இருக்க..? என்ன பன்ற.., எங்க இருக்க.. னு.. சந்தோசத்துல தவிச்சு என்ன பேசவே விடாம.. அவன் நார்மலா வரதுக்குள்ள போதும் போதும் னு ஆக்கிட்டான்.. நண்பர்கள் தினத்துக்கு எங்களுக்கு கிடச்ச பரிசு தொலைந்துப்போன எங்கள் நட்பு..


இவன் கூட ஆறு வருசமா இருக்கேன்.. நான் இவனுக்கு எதுவுமே பண்ணது இல்லை என்றாலும்.. அவனோட எல்லா நிலையிலும் நான் இருந்து இருக்கேன்.. என்னோட LIFE CHANGER இவன். B.C.A முடிச்சுட்டு M.C.A பண்ணலாமா வேணாமா னு நான் தவிச்சபோது எனக்கு தெரியாம எங்க மாமாட்ட பேசி என்ன SATHYABAMA UNIVERSITY ல படிக்கவச்சு இப்ப கைல ஒரு வேலையையும் வாங்கி கொடுத்துட்டான்..


இவன் கூட இருந்தப்ப தான் அதிகமா சிரிச்சு இருக்கேன்..


அவனுக்கு நிறைய கஷ்டம் இருந்தப்ப கூட மத்தவங்கள சிரிக்கவச்சு.. சந்தோசபடுத்துவான்..


இவன் PHOTO காமிச்சா போதும்.. இவன முன்ன பின்ன சந்திக்காதவன் கூட தெரிச்சு ஓடிருவாங்க.. அந்த அளவுக்கு PHOTO பிரியன்.. எல்லாரும் புரிஞ்சு இருப்பாங்க டா.. அன்பு.. உன்ன பத்தி தான் சொல்றேன்..னு..


இவரு M.C.A DEPT கே செல்லப்பிள்ளை.., FRIENDSHIP DATABASE.., யாருக்கு எது பிடிக்குமோ அத மட்டும் தான் செய்வான்.., கோபம் வராது.., எதுக்கும் ஃபீல் பண்ண மாட்டான்,( ஒரு விஷயத்த தவிர..) வணக்கம் தல.. னு சொல்லிகிட்டே.. அவன அடிக்க செமையா ப்ளான் போட்டு கொடுப்பான்..,
எல்லாருக்கும் இவன பிடிக்கும்.. எல்லாருடைய சோக கதையும் இவன்ட்ட இருக்கும்... இவன்ட்ட பேசிட்டு இவன விட்டு பிரிஞ்சு வர மனசு இல்லாம எத்தனையோ நாள் தவிச்சிருக்கேன்..


I LOVE YOU DA DINESH…


என் சித்தப்பா ஒரு நாள் இப்படி friend friend னு அலையிரியே.. கஷ்டத்துல சொந்தக்காரங்க தான் ஹெல்ப் பண்ணுவாங்க தெரிஞ்சுக்கோ னு சொன்னார்..
அட போங்க சித்தப்பா.. அப்ப கூட இன்னொரு ஃப்ரென்ட் தேடி தான் போவேன்.. சொந்தக்காரங்கள சீண்ட மாட்டேன் னு சொல்லிட்டு வந்தேன்..


IF YOU FEEL SAD, BE RELAX, ONE FRIEND WILL COME TO WIPE YOUR TEARS AND SADNESS…


இப்படி பட்ட நண்பர்களை எனக்கு கொடுத்ததுக்காக இருக்கிறாறோ இல்லையோ.. அந்த கடவுளுக்கு நன்றி..