Friday, 31 August 2012

INBOX


10 new messages received

குறுஞ்செய்தியை ரசிக்கும்
எல்லா பெண்களும்
அழகாகவே தெரிகிறார்கள்...



உன்னை நினைத்தவுடன்
சிணுங்குகிறது என் அலைபேசி...
இது என்ன டெலிபதியா...
இல்லை செல்விதியா..



உன் குறுஞ்செய்திக்காக
காத்திருக்கும் சமயங்களில்
FORWARD MESSAGE அனுப்பும்
நண்பன் மட்டும் கைல கிடச்சான்...



முகநூலும்அலைபேசியும் வந்த பிறகு
சங்க இலக்கியத்திலிருந்து
தூது என்ற வகையையே எடுத்துவிட்டார்களாம்....
-தமிழ் ஐயாவின் புலம்பல்.



செல்போன் டவர்களின் அதிக கதிர்வீச்சால் சிறு பறவையினங்கள் அழிந்துவிட்டன.     –செய்தி
அட போங்கயா... ஈழத்துல எங்க இனம் அழிஞ்சதுக்கே நாங்க கவலபடல...




UNKNOWN நம்பர்ல இருந்து கால் வந்தாலே எடுப்பதில்லை...
ப்ராஜக்ட் காலோ என்ற பயம்...



சீனாவில் பிரபல எழுத்தாளர்களின் நாவல்களை SUBSCRIBE செய்து கொண்டால் தினம் ஒரு பகுதி குறுஞ்செய்தியாக வந்து சேர்கிறது...



செல்போன் கண்டுபுடிச்சவந்தாயா உலகத்துக்கே சாமிஉச்சக்கட்ட போதையில் நண்பனின் பகுத்தறிவு தத்துவம்...



ஒன்னாம் தேதி காலையில்
மச்சான் இன்னைக்கி ட்ரீட் வைடா...
ஏன்டா...
அதான் BULK SMS தடைய நீக்கிட்டாங்கள....



WRONG CALL வந்தாலும் மொக்கை போடும் பழக்கம் எனக்கு உண்டு...
ஹாய் சுதாகர்...
ம்ம்.. நீங்க...
என்னடா இன்னும் தூக்கமாநைட் படம் பார்த்தியா...
ஆமா...
மன்னிக்கவும் எழுத முடியாத அளவிற்கு BAD WORDS…
சிறிது சமாளிப்பிற்கு பின் செல்லமாய் கொஞ்சம் கொஞ்சல்கள்... அப்படியே பேச்சு நீண்டது...
திடீரென நீ யாருனு நினைச்சுகிட்டு என்ட பேசிட்டு இருக்க...
திவ்யா தானே இல்ல இல்ல ப்ரியா....
CALL END
யார் காதலுக்கோ சுபம் போட்ட சந்தோசம்...

Thursday, 30 August 2012

காவிரி


கைவிரி கோலமாய்
இன்று எங்கள் காவிரி.

அவளின் மடியெங்கும்
கானலின் நீரோட்டம்.

ஈழ தமிழச்சியாய்
நிர்மூலமாகி நிற்கிறாள்.

ரகசியங்கள் அழிந்து
ராப்பிச்சை கேட்கிறாள்.

ஆவணி தாண்டியும் இனிக்கவில்லை
ஆடி பெருக்கு விழா.

நீருக்கடியில் நினைவிழக்கும் இன்பம்
வாய்க்கவில்லை என் தம்பிகளுக்கு...

முதிர்க்கன்னி காதலாய்
ஏங்கி நிற்கிறது வயல்வெளி.
பருவம் தப்பியாவது
பெய்யுமா பருவமழை என்று...

மழைநீரை தேக்கி வைக்கும்
மணல்வெளியும் மிஞ்சவில்லை
எச்சத்தையும் விழுங்கும்
நரிகள் கூட்டத்தால்...

நாற்றுகளுக்கிடையே நடனமாடும்
பருவ காற்று தேடி செல்கிறது
இழந்த சலங்கை ஒன்றை தேடி
குடகு மழை நோக்கி...

பிருந்தாவன் பூங்காவின்
எச்சத்தையாவது தாருங்கள்
எங்கள் பசிபூங்காவினை
கொஞ்சம் இளைப்பாற்றிட...

என்று வருவாய் எங்கள் தேவி...

Sunday, 26 August 2012

மழை நினைவு


உன்னை நினைக்கவே
என்னை நனைக்குது மழை...

துளிர் விடும் இலை போல்
தளிர் விட்டு பார்க்கிறது
நீயும் நானும்
விரல் கோர்த்த படி
வீதியில் நனைந்த ஒரு மழைதினம்.

உன்னையும் என்னையும் நனைத்த
மழைத்துளி எங்கே என்கிறாய்,
பதில் சொல்ல தெரியாமல்
நானும் தேடி பார்க்கிறேன்.

அடைமழையில்
அடைக்காக்கும் காகம் போல
போர்வைக்குள் நீயும் நானும்...

மழைக்கால இரவின்
தேனீர் இதமாய்
உன் இதழ் முத்தம்...

இலையில் தேங்கி
வழியும் நுனிநீர் போல
இமையில் கசியும்
சிலதுளி விழிநீர்...

மழை நின்றபின் நிசப்தமாய்
பிரியும் நொடியில்
உன் மௌணங்கள்....

Friday, 24 August 2012

எத்தனை கோடி இன்பங்கள்


எத்தனைக் கோடி இன்பங்கள் வைத்தாய்
எங்கள் இறைவா...!

நட்பென்று ஒன்றை தந்தாய்
நண்பர்கள் கோடி தந்தாய் - தனிமையிலே
வாழ்க்கை வெறுக்கும் வேளையிலே
துணையென்று நிற்க வைத்தாய்...

காதல் ஒன்று தந்தாய் – காகிதமாய்
என்னை பறக்க வைத்தாய்.
காதலில் வலியும் தந்தாய்
என்னுள் என்னை உணர வைத்தாய்...


வெள்ளை நிலவொன்று தந்தாய் – அதில்
அவள்முகம் காண வைத்தாய்
ஒருநாள் மறைய வைத்தாய்
என்தவிப்பை நீ ரசித்து வைத்தாய்...

அழகிய இரவுகள் தந்தாய்
அர்த்தமின்றி அலைய வைத்தாய்
சேதி சொல்லும் கனவுகள் தந்தாய் - வாழ்வின்
விசித்திரங்கள் விளங்க வைத்தாய்...


தமிழை கற்க வைத்தாய் - என்னை
தரணியில் நிலைக்க வைத்தாய்
கவிதை புனைய வைத்தாய்
நித்தம் எனை கரைய வைத்தாய்...

புத்தகங்கள் எனக்கு அளித்தாய்
என்னை புதைந்திருக்க வைத்தாய்
வரலாற்றை சொல்லி தந்தாய்
வாழ்வின் நல்லறிவினை தருவித்தாய்...


இசையை கேட்க வைத்தாய்
அழகை ரசிக்க வைத்தாய்
இயற்கையை எனக்கு அளித்தாய்
அளவில்லா அன்பு வைத்தாய்

வாசம்வீசும் மழைத்துளி தந்தாய்
தாகம்தீரா உயிர்த்துளி தந்தாய் 

இயல்பாய் சிரிக்க வைத்தாய்
உன்னை நினைக்க வைத்தாய்

எப்படி சொல்வேன் என் இறைவா
ஒற்றை வார்த்தையில் ஓராயிரம் நன்றிகள்...

Saturday, 11 August 2012

புதைந்த ரகசியங்கள்


ஜன்னல் கம்பிகளின்
வழியே வெறித்திருக்கும்
அவளின் விழிகளில்
ஏதோ ஒன்று புதைந்திருக்கும்...


அவளின் சமையலறை சங்கீதத்தில்,
மெல்லிய சோகம் ஒன்று
இழைந்தோடி கொண்டே இருக்கும்..

அவள் பாடாத
மொட்டை மாடி இரவுகளும்..,
வெள்ளை நிலவும்,
எனக்கு பிடிக்கவில்லை..

அவள் ரசித்த
இளையராஜா பாடல்கள் எல்லாம்...,
எனக்கு பிடித்த
ரஹ்மான் பாடல்களாய் ஒலிக்கின்றன..

அவள் படித்த
பொன்னியின் செல்வனும்,
கருவாச்சி காவியமும்,
ஒரு மூலையில்
சீண்டுவோர் யாருமின்றி கிடக்கிறது
அவள் நினைவுகளை போலவே...

ஒரு விடுமுறை தினத்தில்
கணவனுடன் மீண்டும் வந்தாள்...
இன்றும் அவள் கண்களில்
அப்படியே தேங்கி நிற்கும் சோகமும்,
அது புதைத்து வைத்த ரகசியங்களும்...,
எனக்கு புரியவில்லை...