Tuesday, 13 November 2012

தீபாவளி வாழ்த்துகள்



எங்கேயோ குண்டு வெடிக்கிற சத்தம்..., ஒன்னுமே தெரில எங்கும் புகைமயம். அங்க சரிஞ்சு விழுறது யாரு நம்ம ராணுவ கமாண்டோவா..., இருக்காது..., தட்டுத்தடுமாறி பக்கத்துல போனா பேச்சு மூச்சு இல்லாமா கிடக்கிறாரு..., என் உயிர கொடுத்தாவது உங்க உயிர காப்பாத்துவேன் கேப்டன் அப்பிடினு சொல்லிக்கிட்டே அவர என் தோள்ல போட்டுகிட்டு ஓடுறேன். என் காதுக்குப் பக்கத்துலேயே அடுத்த குண்டு வெடிக்குது. திடுக்குனு தூக்கிப்போட்டு முளிச்சு பாத்தா... கனவா... எவன்டா காலைலயே வெடி வெடிக்கிறது. டேய் 6 மணிக்கு மேலதான் வெடிக்கணும் சுப்ரிம் கோர்ட் ஆர்டர் என்று அவனுக்கு புரியாத மொழியில் அவனை மிரட்டி விட்டு மொபைல்ல டைம் பாத்தா மணி 4.30. சித்தி வடை சுடுற வாசம் வந்துச்சு. அதுக்கு அப்புறம் எப்படி தூக்கம் வரும்.

டி.வில காலையிலேயே மங்கள இசை... எந்த சேனல் போனாலும் யாரோ ஒருத்தர் நாதஸ்வரம் வாசிச்சுக்கிட்டு இருக்க நமக்கு இது செட் ஆகாதுனு பல்லு விளக்கப் போயிட்டேன். போயிட்டு வந்து பாத்தா சுதா ரகுநாதன் கணபதிய பத்தி ஏதோ பாடிட்டு இருந்தாங்க. பாட்டு நல்லா இருந்தாலும் எனக்கு ஒன்னும் புரியாததால அடுத்த சேனலுக்கு போனா அங்க அதே பாட்ட பாம்பே ஜெயஸ்ரீ பாடிட்டு இருந்தாங்க. அதுக்கு அடுத்த சேனல்லேயே நித்யஸ்ரீ மகாதேவன் ஹை பிட்ச்ல பாடிட்டு இருக்க அவங்க குரல்ல மயங்கி எப்படி தூங்குனேன் தெரில தூங்கிட்டேன்.

எந்திரன் ரஜினி மாதிரி கைல 50 கண்ண வச்சுக்கிட்டு ஹேப்பி டீவாலி ஃபோல்க்ஸ்னு சுட்டுக்கிட்டு இருந்தேன். நல்ல நாள் அன்னைக்கு கூட இப்பிடியா தூங்குவாய்ங்க ஏந்திரிங்கடானு சித்தப்பா திட்டிக்கிட்டே க்ராஸ் பண்ணி போக, என்ன அவர மட்டும் சுட மாட்டேங்குது, துப்பாக்கில ஏதாச்சும் ஓட்டையானு முளிச்சு பாத்தா 1000 வாலா பட்டாச பத்த வச்சுக்கிட்டு இருந்தான் தம்பி. இப்போ டி.வில சுகிசிவம் ஏன் தீபாவளி கொண்டாடுறோம்னு சொற்பொழிவு ஆத்து ஆத்துனு ஆத்திக்கிட்டு இருந்தாரு. டீ ஆத்திக்கிட்டே சித்தியும் வந்துச்சு...

டீய ஒரு கல்ப் அடிச்சுட்டு அடுத்த சேனலுக்கு போனா அன்னைக்கி ரிலீஸ் ஆகுற படத்தோட ப்ரமோசன். அந்த பட டைரக்டரு இதுவரைக்கும் நீங்க பாக்கத ஹீரோவ இந்த படத்துல நாங்க காட்டியிருக்கோம். ரொம்ப கஷ்ஷ்...ட்ட்ட..ப்பட்டு நடிச்சு கொடுத்து இருக்காரு, கண்டிப்பா இந்த படத்துக்கு அப்புறம் அவர புடிக்காதவங்களுக்கு கூட அவர புடிக்கும்னு சொல்லிக்கிட்டே போக போன படத்துக்கும் இதே பில்டப்பு தான் கொடுத்த, பாதி படத்துலேயே ஓடி வந்தது எங்களுக்கு தானே தெரியும்னு சேனல சேஞ்ச் பண்ணா ஒரு படத்தோட ஆடியோ ரிலீஸ். மியூசிக் டைரக்டர் தம்பிய பாட சொல்லி காம்பையர் பொண்ணு வற்புறுத்த இவரு வெக்கப்பட்டுக்கிட்டே ரெண்டு லைன் பாட அதுக்கு டைரக்டர் வாவ் வாவ்னு சொல்லிட்டு அந்த பாட்ட படமாக்குன விதத்த சொல்ல ஆரம்பிச்சு, கடைசியா மியூசிக் டைரக்டர பாராட்டி முடிஞ்சதும், திரும்ப அந்த பாட்டோட டீசர் போட்டாங்க. அப்ப ஏதோ ஒரு இளையராஜா சார் சாங்க அக்கா ஹம் பண்ணிக்கிட்டே போக எங்கேயோ இடிக்குதே என யோசிச்சிட்டு இருக்கும்போதே குளிக்க எண்ணெய் எடுத்துட்டு வந்துட்டாரு அப்பா.

எண்ணெய் தேச்சுக்கிட்டே பொதிகை சேனல்க்கு வந்தேன். இவிங்க தான் இன்னும் மாறாம அப்பிடியே இருக்கானுக... நான் சிரிச்சா தீபா..வளி ஹோய்..னு  சினிமால வர தீபாவளி சாங்க்ஸ்ஸா போட்டிக்கிட்டு இருந்தாங்க. தீபாவளி என்ற வார்த்தைய தவிர அந்த பாட்டுக்கும் தீபாவளிக்கும் எந்த சம்பந்தமும் இல்ல... ஆனா போட்டானுக வேற வேல இல்லாம நானும் பாத்தேன்.

குளிச்சுட்டு வந்ததும் டி.விய போட்டா காலைலியே கோட்ட மாட்டிக்கிட்டு பஞ்சாயத்து பண்ண வந்துட்டாரு நம்ம நாட்டாம. இவரு என்னைக்கி கோட்ட கழட்டுறாரோ அன்னைக்கி தான்டா நமக்கு தீபாவளினு சொல்லிக்கிட்டே சேனல்ல மாத்துனா, பாப்பையா கோஷ்டியோட பட்டிமன்றம். முடியலனு சொல்லிக்கிட்டே அடுத்த சேனலுக்கு போனா அங்க ஐ.லியோனி பட்டிமன்றம் நடத்த சொன்னா பாலிடிக்ஸ் பேசிக்கிட்டு இருக்காரு. கடுப்பாகி திரும்ப பாப்பையாக்கே வந்துட்டேன். பாரதி பாஸ்கரும், ராஜாவும் ஒரு வழியா பேசி முடிச்சாங்க.

பாதி படத்துலேயே பஞ்சராகி, எப்படா முடிப்பீங்கனு தலைவலி தாங்காமா உக்காந்திருந்த படத்த இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக என்று நீட்டி முழங்கி டைட்டில போட்டதும், ஐயய்யோ இந்த படமானு தெரிச்சடிச்சு அடுத்த சேனலுக்கு போனா அங்க இதவிட மொக்க படத்த போட்டானுக. அதுக்கு இதுவே பெட்டர்னு இந்த சேனலுக்கு வந்தா அந்த பட ஹீரோவோட விளம்பரம், படத்துலேயே உன்ன பாக்க முடியல இதுல இங்க வேறய்யானு திட்டிக்கிட்டே சேனல மாத்துனா அங்க அண்ணனும் தம்பியும் மாறி மாறி விளம்பரத்துல வந்து செம கடுப்பேத்திட்டானுக...

போன வருசம் வடிவேலு வடிவேலுனு ஒருத்தரு, காட்டுக்குள்ள ஊருக்குள்ள அநாதை இல்லத்துலனு தீபாவளிய கொண்டாடிட்டு இருந்தாரு. பாவம் இப்போ ஆள் அட்ரஸே இல்லாம போயிட்டாரு. அந்த இடத்துல எல்லாம் இப்ப சந்தானம் நிக்கிறாரு. அதுலயும் ஒரு பொண்ணு நீங்க எப்ப ஆஸ்கர் வாங்க போறீங்கனு கேக்குது...

இப்படிதாங்க சந்தோசமா போயிட்டிருக்கு என் தீபாவளி. இதுக்காங்க பண்டிகை எல்லாம் கொண்டாடுராங்க. கடுப்பா வருதுங்க. கரெண்ட் கட் பண்ணாம இருக்கிறதுக்காக ஃபர்ஸ்ட் டைம் வருத்தப்படுறேங்க. தயவுசெஞ்சு டி.விய நிப்பாட்டிட்டு, உறவுகளோட உறவாடி பண்டிகைய கொண்டாடுங்க. மனசுல இருந்து நீங்காத தீபாவளியா இது அமைய என் நல்வாழ்த்துகள்....

நன்றிகளுடன்
யோகி

Tuesday, 30 October 2012

சாமத்து காமம்


ஆடுமாடு அச போட
ராத்திரியும் நட போட
வெண்ணிலவும் தொண தேட
சழுதியில நமது கூடல்.

சந்திரனும் சாமத்துல
மேகத்தோடு காமத்துல,
வலிக்காம தேகத்துல
வழிதேடும் விரல்போல

சத்தம் கித்தம் போடாம
முத்தம் நித்தம் நீ கொடுக்க
சித்தம் பித்தம் தெளியாம
கக்கத்துல நான் கெடக்க

வெட்கம் எல்லாம் ஓடிபோயி
வெப்பம் மட்டும் கூடிபோயி
சொர்க்கம் இது தானானு
சொக்கி போன விழிதேடும்.

விடிஞ்ச சேதி தெரியாம
இமை ரெண்டும் பிரியாம
நடந்தது என்னானு கேட்டா - புரியாம
புரிய வைக்கும் சாமத்து காமம்.

Sunday, 28 October 2012

கரும்பலகை




அறிவிற்கான வழித்தடம்.
தலைவர்களின் விதைப்பிடம்.
தீண்டாமையை தொட்டொழித்த திருத்தலம்.
சாதியை புறம் தள்ளிய போர்க்களம்.
ஆத்திகத்தையும் சொல்லித்தந்த பகுத்தறிவு களம்.

நல்லதொரு விஜயதசமி நாளில்
நண்பர்களுக்கு மிட்டாய் வழங்கி தொடங்கப்பட்டது
எனக்கும் கரும்பலகைக்குமான நட்பு.

அ – அம்மா, அன்பழகி
என என் சின்ன கரும்பலகையில்
எழுதி நீட்டினேன்.
உள்ளம் பூரித்து
தினம் ஒரு முத்தத்தையும்,
வலிக்காத கன்னக்கடிகளையும்
பரிசாய் தந்தாள்.

அழையா விருந்தாளியாய்
அறிவொளி இயக்கத்தில்
இணைந்த போது,
என்னை ஆசானாக்கி
அழகு பார்த்தது...

சிலேட்டில் சிலேடை எழுதியவனை
சீர்த்திருத்தியது ஒரு கரும்பலகை.
குற்றியலுகரத்திற்கு உதாரணம்
எழுதிட சொன்னது ஒரு சமயம்.
வேகமாய் சென்று
“எனக்கு தெரியாது” என எழுதி வந்தேன்.
நண்பர்கள் சிரித்தார்கள்,
ஐயாவோ வியந்தார்.

கரும்பலகையுடன்
கரும்பு நிமிடங்கள் அவை.
நானும் அவனை போல் மாறிவிட்டேன்,
வாழ்க்கை பல வண்ணங்களை
தெளித்து செல்கிறது...

Wednesday, 24 October 2012

அந்திவேளை

மழையும் வெயிலும்
சந்தித்துக்கொள்ளும்
ஒரு மாலைப் பொழுதில்
வெட்கம் போல பூத்திருக்கும்
வானவில்லை ரசித்திருக்கிறாயா நண்பா நீ...

சுற்றித்திரிந்த பறவைகள் கூட்டம்
கூடு திரும்பி
அன்றைய கதைகளை கதைக்கும்
கீச்சல்களை கேட்டிருக்கிறாயா நண்பா நீ...

அந்திவேளையில்
ஆடுமாடுகள் நடத்திடும்
அழகிய அணிவகுப்பை
கண் கொட்டாமல் பார்த்திருக்கிறாயா நண்பா நீ...

அகவும் மயிலின் நடனம்
அரங்கேறும் நேரம்
எதுவென அறிவாயா நண்பா நீ...

நிறமாலையின் வண்ணங்கள் எல்லாம்
நிறப்பிரிகை இல்லாமல்
விண்ணில் விரியும் விந்தையை
வியந்திருக்கிறாயா நண்பா நீ...

மஞ்சள் பூசியும் மறைக்கமுடியாமல்
வெட்கத்தில் சிவந்து நிற்கும்
குளத்து நீரையும், - அதில்
விளக்கில் ஏற்றிய சுடர் போல்
புதிதாய் மலர்ந்திருக்கும்
தாமரை மொட்டுக்களையும், - அதன்
உச்சியை இலக்காக வைத்து
தாவி குதித்தாடும்
கெண்டை மீன்களையும்
நேரம் போவதே தெரியாமல்
ரசித்திருக்கிறாயா நண்பா நீ...

களைப்பு கலந்த குறுநகையுடன்
கையில் காளையையும்,
தோளில் கலப்பையையும்,
சுமந்து வரும் உழவனின்
உடற்கட்டை வியந்து பார்த்திருக்காயா நண்பா நீ...

வீடு திரும்பும்
அப்பாவின் கால்களை
ஓடி சென்று கட்டிக்கொண்டிருக்கிறாயா நண்பா நீ...

பள்ளியிலிருந்து
சிறகை விரிப்பதுபோல்
கைகளை விரித்து
ஓடிவரும் பிள்ளையை
வாரி அணைத்திருக்கிறாயா நண்பா நீ...

ஊரையே கூப்பிடும்
அம்மாவின் அடை வாசனையுடன்
குளிருக்கு இதமாய்
உளுந்தங்கஞ்சியையும் உண்டிருக்கிறாயா நண்பா நீ...

தாத்தாவின் கால்களில்
அம்மா குளத்துல விழுறியா இல்ல
அப்பா குளத்துல விழுறியா என
வேட்டியில் தூழி ஆடியிருக்கிறாயா நண்பா நீ...

பாட்டியின் மடியில் படுத்து
பூத கதைகளை கேட்டு
பாதி கனவில் விழித்திருக்கிறாயா நண்பா நீ...

திடீரென ப்ராகாசிக்கும்
தெருவிளக்கை கண்டு
விரலுக்கு முத்தமிட்டு
சாமி கும்பிட்டிருக்கிறாயா நண்பா நீ...

விளையாட்டின் நேர்த்தியையும்
எழுத வேண்டிய வீட்டு பாடத்தையும்
வியந்து ரசித்த திரைப்படத்தையும்
நண்பனிடம் உவகையுடன் விவரித்திருக்கிறாயா நண்பா நீ...

கோவில் மதிலில் அமர்ந்து
தலைக்குனிந்து நடந்து வரும்
தாவணி தென்றல்களுக்கு
மதிப்பெண் இட்டிருக்கிறாயா நண்பா நீ...

அந்த பாவையின்
ஓரவிழி பார்வையின் பரவசத்தில்
பூக்கும் வெட்கத்தை
மறைக்க முடியாமல் திணறியிருக்கிறாயா நண்பா நீ...

மாடத்தில் அமர்ந்து
மனைவியுடன் அந்தரங்கம் பேசி
மதி மயக்கும் பாடல்களில்
லயித்ததுண்டா நண்பா நீ...

நந்தவனத்தை விட்டு
நகர்வலம் வந்துவிட்ட
உங்களுக்கு எப்படி தெரியும்
அந்திவேளையில் தான்
இப்பிறவியின் பலன் இருக்கிறதென்பது...

Tuesday, 23 October 2012

யாழிக்கு கவிதைகள்


நீ சிரிக்கும் போதெல்லாம்
முத்தமிட்டு என்னை
நிரப்பிட முடியாது என
என்னை ஏளனம் செய்கிறது
உன் கன்னக்குழி.
இன்னொரு வாய்ப்பு தாயேன்
இம்முறையாவது நிரப்பிட முயற்சிக்கிறேன்.

விழித்து பார்த்துவிட்டு
இழுத்தி போர்த்திகொண்டு உறங்கும்
புலர்ந்த காலைப் பொழுதின் உறக்கம் போல்
இன்னும் கொஞ்சம் நீள வேண்டும்
உன்னை அணைத்திருக்கும் இந்த நொடிகள்.

என் தலையணையை
பலமுறை தாக்குகிறேன்
ஒருமுறையாவது
உன் மடியில் படுத்த சுகத்தை தா என்று
பலனே இல்லை.

Monday, 22 October 2012

யாழிக்கு கவிதைகள்


கைப்பிள்ளை காதல் என்கிறேன் – நீ
கைக்கிளை காதல் என்கிறாய்.

காவிய காதல் என்கிறேன்.
காவியங்களில் காதலர்கள்
இணைவதில்லை என்கிறாய்.

வாழ்ந்து காட்டுவோம் வா என்கிறேன்.
வேர்கள் இல்லாமல்
விழுதுகள் நிலைக்காது என்கிறாய்.

வலி இல்லாமல்
காதல் இல்லை என்கிறேன்.
வழியே இல்லை
தேடல் எங்கே என்கிறாய்.

காட்டாற்றுக்கு வழி
தேவை இல்லை என்கிறேன்.
காதலூற்றுக்கு மடை அதிகம் என்கிறாய்.

அணையிட்டு அடைத்தாலும்
அடங்காது காதல் என்கிறேன்.
அழகிய வார்த்தைகள்
வாழ்க்கைக்கு உதவாது என்கிறாய்.

என்னை என்ன தான்
செய்ய சொல்கிறாய் என்கிறேன்.
மறந்துவிடு என்கிறாய்.

இது என்ன
பெட்ரோல் டீசல் விலையேற்றமா
இரண்டு நாள் கழித்து மறப்பதற்கு...
காதலில் மறந்துவிடு
என்பதன் பொருள் என்ன தெரியுமா
மனதின் ஒரு மூலையிலிருந்து
தினம் வதைக்கும் வலி...

இப்படி பேசியே
எனை வீழ்த்திவிட்டாய் என்கிறாய்.
வீழ்வது தானே
காதலில் சுகம் என்கிறேன்.

இதற்குமேல் விட்டால்
பேசிக்கொண்டே இருப்பாய் என
இதழ் கோர்த்துவிட்டாய்.
கயவர்கள் ரசிக்கிறார்கள்
மறைவிடம் செல்வோம் வா...

*கைக்கிளை – நிறைவேறா காதல்.

Thursday, 18 October 2012

காதலழுத்த தாழ்வு நிலை


தமிழகத்தில் மழை பெய்தால் மண்வாசம் வருகிறதோ இல்லையோ இவர் வாசம் வந்துவிடும். சென்னை வானிலை ஆய்வு மைய தலைமை அதிகாரி திரு.ரமணன் அவர்களுக்கு இதை சமர்ப்பிக்கிறேன்.

வங்க கடலில்
காற்றழுத்த தாழ்வு நிலை.
அங்க கடலில்
காதலழுத்த தாழ்வு நிலை.

வடகிழக்கு பருவமழை ஆரம்பம்
வானிலை அறிக்கை.
மனகிறுக்கு பித்துநிலை ஆரம்பம்
என்நிலை அறிக்கை.

தமிழகத்தில்
மிதமானது முதல்
கனமானது வரையிலான
மழை பெய்யும் வாய்ப்பு.
அவளகத்தில்
மிதமானது முதல்
கனமானது வரையிலான
முத்தம் பொழியும் வாய்ப்பு.

பிற பகுதிகளில் வானம்
மேக மூட்டத்துடன் காணப்படும்.
சில நேரங்களில் தேகம்
வெட்க மூட்டத்துடன் காணப்படும்.

பள்ளிகளுக்கு விடுமுறை
பள்ளி கல்வித்துறை அறிவிப்பு.
ஆடைகளுக்கு விடுமுறை
காதல் கலவித்துறை அறிவிப்பு.

கடந்த 24 மணிநேரங்களில்
புதுச்சேரியில் அதிகபட்சமாக
9 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
கடந்த 24 நிமிடங்களில்
இதழ்ச்சேரியில் அதிகபட்சமாக
9 முத்தங்கள் பதிவாகியுள்ளது.

அடுத்த 48 மணிநேரங்களுக்கு
தமிழகத்தில் மழை நீடிக்கும்.
அடுத்த  48 வருடங்களுக்கு
என்னகத்தில் காதல் நீடிக்கும்.

Wednesday, 17 October 2012

INBOX


ஐ...! போன்னு...!! என வியந்த காலம் போயி, I phone da என அசால்ட்டாக சொல்லும் காலமாகிவிட்டது.

உறவுகளை பிரிக்கும் காரணிகளில் முதன்மை இடத்தை பிடித்திருக்கிறது செல்போன். அது பயன்ப்படுத்த படவில்லை என்றாலும், அது இருந்தாலே பிரச்சனை என்கிறது ஒரு ஆய்வறிக்கை.

FORWARD MESSGES ஆகவே அனுப்பிக்கொண்டிருந்த நண்பனை அழைத்து ஏன்டா..., வேற வேலையே இல்லையா, இப்பதான் MESSAGE அனுப்பிகிட்டு உக்காந்திருக்க என திட்டிவிட்டு ஃபோனை வைத்தேன். அப்போது தான் MESSAGE அனுப்பியே KEYBOARD தேய்ந்து போன பழைய நோக்கியா 1100 கண்ணில் பட்டது.

இதுல நூறு மெஸ்ஸேஜ் ஃப்ரீயா இருக்கு, யாருக்காவது அனுப்பி காலி பண்ணு மாப்ள என்று ஃபோனை தந்தார் மாமா. நான் யார் என்று சொல்லாமலேயே மெஸ்ஸேஜ் அனுப்பி நண்பனை கலாய்த்து கொண்டிருந்தேன். ஒருநாள் நண்பர்களுடன் உச்சக்கட்ட போதையில் இருக்கும் போது இந்த நம்பருக்கு கால் பண்ணி கன்னாபின்னானு திட்டுங்கடா என அவன், மாமா நம்பரை கொடுத்துவிட்டான். நானும் சேர்ந்து கொண்டு அவரை நார்நாராய் கிழித்து எறிந்தோம். மறுநாள் காலையில் நேத்து நீ திட்டுனது உங்க மாமாவடா என அவன் சொன்ன போது தான் எல்லாம் தெளிந்தது.

சமீபகாலமாக ஒரு மோசமான பழக்கத்தில் சிக்கி தவிக்கிறேன். கூட்டமாய் நின்று பேசிக்கொண்டிருக்கும் போது, அவர்களோடு இயைந்து என்னால் பேச முடியவில்லை என்றால், ஃபோனை எடுத்து நண்பர்களுக்கு மெஸ்ஸேஜ் அனுப்ப ஆரம்பித்துவிடுகிறேன். என்னடா பழக்கம் இது என்று அப்பா கூட இருமுறை கடிந்து கொண்டார்.

“நான் யாருனு சொல்லு பாப்போம்” இது தான் என் முதல் அழைப்பில் நண்பர்களுடன் பேசிய முதல் வார்த்தையாக இருந்திருக்கும்.
மச்சி ஸ்கோர் அனுப்புடா...

143...
Me too…
இவ ஏன் இப்ப இத அனுப்புறா என யோசித்துவிட்டு sent item எடுத்து பார்த்த போது தான் தெரிகிறது, நம்பர் மாத்தி அவன் தங்கச்சிக்கு அனுப்புனது.

எப்ப பாத்தாலும், மொபைல்ல பத்தி குறை சொல்லிக்கிட்டே இருக்கியே மொபைல் இல்லாம ஒருநாள் உன்னால இருக்க முடியுமா என நண்பன் கேட்டான். அடிக்கிற கை தான்டா அணைக்கும் என்று நான் சொன்னேன்.

இந்த G5 மொபைல் ரிங்டோன் கேட்டாலே மண்டைக்குள்ள “டொய்ங்”னு ஒரு சத்தம் கேக்குது. கற்றது தமிழ் பிரபா மாதிரி கோவம் வருது... பாத்து இருந்துக்கோங்க மக்களே...

25000 ரூபாய்க்கு SMART PHONE வாங்கி ஒரு அப்ளிகேசன கெத்தா காட்டுனா, 2500 ரூபாய்க்கு ஒரு சைனீஸ் செட் வாங்கி அந்த அப்ளிகேசன்ல அது நொட்ட, இந்த அப்ளிகேசன்ல இது சொட்டனு சொல்றவன என்னங்க பண்ணலாம்...