Tuesday, 16 October 2012

எனக்கிது போதும்...


எதற்காக பிரிந்தோம் என்று
இன்னும் காரணமே
அறியப்படாத நிலையில்
உன் பிறந்தநாள் அன்று
இமைகளுக்குள் சிறகடிக்கும்
நினைவுகளை ரசிப்பதை விட
வேறு என்ன நான்
சிறப்பாய் செய்துவிட முடியும்.

உன்னை நினைத்த மாத்திரத்தில்,
குறுநகை ஒன்று
இதழோரம் துளிர்த்து,
இலை விழுந்த நீராய்
சலனம் செய்தது கன்னத்தில்.
என்னையே அறியாமல்
“குத்துது” என நீ ரசித்த
தாடியை தடவி பார்க்கிறேன் நான்.

அணிலாடும் முன்றிலில்
ஊடலாடிய பொழுதுகள்
நினைவாடி செல்கிறது
நீ மட்டும் இங்கு இல்லை.
உன்னை சந்திக்க விரைகிறேன்
ஒரு தயக்கம் வந்து
தகராறு செய்கிறது.
தகர்த்தெறிந்து உனக்காக
காத்து நின்றேன்.

தூரத்தில் நீ வருவது தெரிந்ததும்
உதிர்ந்த பின்னும்
சிரிக்கும் மன்றத்து பூக்களாய்
மலர்ந்துவிட்டேன் நான்.
இறுக்கமாக இரு,
சிரித்துவிடாதே என
பயிற்சி தந்ததையெல்லாம்
உன்னை பார்த்த மாத்திரத்திலேயே
மறந்துவிட்டது மனது.

நாம் காதலாடிய
இடத்தில் வைத்து
அணிலாடும் முன்றிலை
பரிசாய் தருகிறேன்.
பிரியும் நொடியில்
என் முத்த ஏக்கத்தை
எப்படி அறிந்தாயோ...
இறக்கும் வரை
மறக்காத தடமாய்
மனதில் பதிந்தது அது.
                எனக்கிது போதும்...

No comments:

Post a Comment