மழையும் வெயிலும்
சந்தித்துக்கொள்ளும்
ஒரு மாலைப் பொழுதில்
வெட்கம் போல பூத்திருக்கும்
வானவில்லை ரசித்திருக்கிறாயா நண்பா நீ...
சுற்றித்திரிந்த பறவைகள் கூட்டம்
கூடு திரும்பி
அன்றைய கதைகளை கதைக்கும்
கீச்சல்களை கேட்டிருக்கிறாயா நண்பா நீ...
அந்திவேளையில்
ஆடுமாடுகள் நடத்திடும்
அழகிய அணிவகுப்பை
கண் கொட்டாமல் பார்த்திருக்கிறாயா நண்பா நீ...
அகவும் மயிலின் நடனம்
அரங்கேறும் நேரம்
எதுவென அறிவாயா நண்பா நீ...
நிறமாலையின் வண்ணங்கள் எல்லாம்
நிறப்பிரிகை இல்லாமல்
விண்ணில் விரியும் விந்தையை
வியந்திருக்கிறாயா நண்பா நீ...
மஞ்சள் பூசியும் மறைக்கமுடியாமல்
வெட்கத்தில் சிவந்து நிற்கும்
குளத்து நீரையும், - அதில்
விளக்கில் ஏற்றிய சுடர் போல்
புதிதாய் மலர்ந்திருக்கும்
தாமரை மொட்டுக்களையும், - அதன்
உச்சியை இலக்காக வைத்து
தாவி குதித்தாடும்
கெண்டை மீன்களையும்
நேரம் போவதே தெரியாமல்
ரசித்திருக்கிறாயா நண்பா நீ...
களைப்பு கலந்த குறுநகையுடன்
கையில் காளையையும்,
தோளில் கலப்பையையும்,
சுமந்து வரும் உழவனின்
உடற்கட்டை வியந்து பார்த்திருக்காயா நண்பா நீ...
வீடு திரும்பும்
அப்பாவின் கால்களை
ஓடி சென்று கட்டிக்கொண்டிருக்கிறாயா நண்பா நீ...
பள்ளியிலிருந்து
சிறகை விரிப்பதுபோல்
கைகளை விரித்து
ஓடிவரும் பிள்ளையை
வாரி அணைத்திருக்கிறாயா நண்பா நீ...
ஊரையே கூப்பிடும்
அம்மாவின் அடை வாசனையுடன்
குளிருக்கு இதமாய்
உளுந்தங்கஞ்சியையும் உண்டிருக்கிறாயா நண்பா நீ...
தாத்தாவின் கால்களில்
அம்மா குளத்துல விழுறியா இல்ல
அப்பா குளத்துல விழுறியா என
வேட்டியில் தூழி ஆடியிருக்கிறாயா நண்பா நீ...
பாட்டியின் மடியில் படுத்து
பூத கதைகளை கேட்டு
பாதி கனவில் விழித்திருக்கிறாயா நண்பா நீ...
திடீரென ப்ராகாசிக்கும்
தெருவிளக்கை கண்டு
விரலுக்கு முத்தமிட்டு
சாமி கும்பிட்டிருக்கிறாயா நண்பா நீ...
விளையாட்டின் நேர்த்தியையும்
எழுத வேண்டிய வீட்டு பாடத்தையும்
வியந்து ரசித்த திரைப்படத்தையும்
நண்பனிடம் உவகையுடன் விவரித்திருக்கிறாயா நண்பா நீ...
கோவில் மதிலில் அமர்ந்து
தலைக்குனிந்து நடந்து வரும்
தாவணி தென்றல்களுக்கு
மதிப்பெண் இட்டிருக்கிறாயா நண்பா நீ...
அந்த பாவையின்
ஓரவிழி பார்வையின் பரவசத்தில்
பூக்கும் வெட்கத்தை
மறைக்க முடியாமல் திணறியிருக்கிறாயா நண்பா நீ...
மாடத்தில் அமர்ந்து
மனைவியுடன் அந்தரங்கம் பேசி
மதி மயக்கும் பாடல்களில்
லயித்ததுண்டா நண்பா நீ...
நந்தவனத்தை விட்டு
நகர்வலம் வந்துவிட்ட
உங்களுக்கு எப்படி தெரியும்
அந்திவேளையில் தான்
இப்பிறவியின் பலன் இருக்கிறதென்பது...