சோகம் என்றாலும்...,
சந்தோசம் என்றாலும்...,
துக்கம் என்றாலும்...,
மகிழ்ச்சி என்றாலும்...
மதுவை நாடும்
மதிக்கெட்ட மனிதர்கள் நடுவில்
நான் மட்டும் விதிவிலக்கா...
எனக்கு மட்டும் மதுவிலக்கா...
அருமை நண்பனின்
அழகிய பிறந்தநாளும்,
பதவி உயர்வும்,
ஒன்று சேர்த்து கொண்டாடினார்கள் அலுவலகத்தில்...
பரிகாச பேச்சுகள்
என்னை சீண்ட...,
பதவி மமதையின் கிண்டல்கள்
கோபத்தை கிளர...,
உள்ளிறங்கிக் கொண்டே
இருந்தது மது...
சுடும் நெருப்பில்
விடும் நெய்யாய்...
மனதின் நெருப்பில்
மதுவின் மயக்கம்.
வார்த்தை மோதலும்,
கைகலப்பும் தீர்ந்த பாடில்லை...
செயல் இழந்த மதியில்
எதுவும் ஏறிய பாடில்லை...
எதை எதையோ
வீசி எறிந்தேன்,
என்னை வீசி எறிந்தார்கள்
வேலை இல்லையென்று...
மது தரும் மயக்கம்
மெய் செயல் இழக்கும்
உலகம் மறக்கும் உறக்கம்
மனதிற்கு அது சொர்க்கம்...
எங்கு சென்றாலும் அவமானம்...
வேண்டியது எல்லாம் சாராயம்...
எங்கு திரும்பினும் கிண்டல்கள்...
அவை தொட்டுக்கொள்ளும் சுண்டல்கள்...
கையில் காசு இல்லை...
நடக்க பாதை இல்லை...
கேவலமாய் கிண்டல்கள்
செவிகள் வேண்டாம்..
ஏளன பார்வைகள்
விழிகள் வேண்டாம்..
அனைவரிடமும் பிரச்சனைகள்
வார்த்தைகளும் வேண்டாம்...
அனைத்தையும் மறந்து கிடக்க
மது மட்டும் போதும்.
தொண்டைக்குழிக்குள்
விக்கி நின்றது சோறு..
அப்பா சொன்னார் தண்டச்சோறு..
வீசி எறிந்தேன்
எறுமை மாடு என்றாள்
நான் என்ன சொரனை கெட்டவனா..?
எடுத்து எறிந்து பேசினேன்
அம்மா என்றும் பாராமல்...
கடிந்து பேசிய
அப்பா மீது
அடித்து பேசிட
ஓங்கின கைகள்...
அதிர்ச்சியில் நீடித்த மௌனத்தில்
வெளியேறினேன் வீட்டை விட்டு.
மதுவை நான் குடித்தேன்
அது என்னை குடித்தது.
நான் வேண்டியது என்ன?
மதுவையா..
இல்லையே...,
என் அவமானத்தின் காயத்தில்
பதியும் முத்தம் தானே
வேண்டி நின்றேன் நித்தம்.
இறப்பதற்கு முன்னே
இறுதி வார்த்தைகள்...
தவறுகள் செய்வது
மனிதனின் இயல்பு.
திருத்திக் கொள்ள
வாய்ப்பு தாருங்கள்...
No comments:
Post a Comment