Tuesday, 13 November 2012

தீபாவளி வாழ்த்துகள்



எங்கேயோ குண்டு வெடிக்கிற சத்தம்..., ஒன்னுமே தெரில எங்கும் புகைமயம். அங்க சரிஞ்சு விழுறது யாரு நம்ம ராணுவ கமாண்டோவா..., இருக்காது..., தட்டுத்தடுமாறி பக்கத்துல போனா பேச்சு மூச்சு இல்லாமா கிடக்கிறாரு..., என் உயிர கொடுத்தாவது உங்க உயிர காப்பாத்துவேன் கேப்டன் அப்பிடினு சொல்லிக்கிட்டே அவர என் தோள்ல போட்டுகிட்டு ஓடுறேன். என் காதுக்குப் பக்கத்துலேயே அடுத்த குண்டு வெடிக்குது. திடுக்குனு தூக்கிப்போட்டு முளிச்சு பாத்தா... கனவா... எவன்டா காலைலயே வெடி வெடிக்கிறது. டேய் 6 மணிக்கு மேலதான் வெடிக்கணும் சுப்ரிம் கோர்ட் ஆர்டர் என்று அவனுக்கு புரியாத மொழியில் அவனை மிரட்டி விட்டு மொபைல்ல டைம் பாத்தா மணி 4.30. சித்தி வடை சுடுற வாசம் வந்துச்சு. அதுக்கு அப்புறம் எப்படி தூக்கம் வரும்.

டி.வில காலையிலேயே மங்கள இசை... எந்த சேனல் போனாலும் யாரோ ஒருத்தர் நாதஸ்வரம் வாசிச்சுக்கிட்டு இருக்க நமக்கு இது செட் ஆகாதுனு பல்லு விளக்கப் போயிட்டேன். போயிட்டு வந்து பாத்தா சுதா ரகுநாதன் கணபதிய பத்தி ஏதோ பாடிட்டு இருந்தாங்க. பாட்டு நல்லா இருந்தாலும் எனக்கு ஒன்னும் புரியாததால அடுத்த சேனலுக்கு போனா அங்க அதே பாட்ட பாம்பே ஜெயஸ்ரீ பாடிட்டு இருந்தாங்க. அதுக்கு அடுத்த சேனல்லேயே நித்யஸ்ரீ மகாதேவன் ஹை பிட்ச்ல பாடிட்டு இருக்க அவங்க குரல்ல மயங்கி எப்படி தூங்குனேன் தெரில தூங்கிட்டேன்.

எந்திரன் ரஜினி மாதிரி கைல 50 கண்ண வச்சுக்கிட்டு ஹேப்பி டீவாலி ஃபோல்க்ஸ்னு சுட்டுக்கிட்டு இருந்தேன். நல்ல நாள் அன்னைக்கு கூட இப்பிடியா தூங்குவாய்ங்க ஏந்திரிங்கடானு சித்தப்பா திட்டிக்கிட்டே க்ராஸ் பண்ணி போக, என்ன அவர மட்டும் சுட மாட்டேங்குது, துப்பாக்கில ஏதாச்சும் ஓட்டையானு முளிச்சு பாத்தா 1000 வாலா பட்டாச பத்த வச்சுக்கிட்டு இருந்தான் தம்பி. இப்போ டி.வில சுகிசிவம் ஏன் தீபாவளி கொண்டாடுறோம்னு சொற்பொழிவு ஆத்து ஆத்துனு ஆத்திக்கிட்டு இருந்தாரு. டீ ஆத்திக்கிட்டே சித்தியும் வந்துச்சு...

டீய ஒரு கல்ப் அடிச்சுட்டு அடுத்த சேனலுக்கு போனா அன்னைக்கி ரிலீஸ் ஆகுற படத்தோட ப்ரமோசன். அந்த பட டைரக்டரு இதுவரைக்கும் நீங்க பாக்கத ஹீரோவ இந்த படத்துல நாங்க காட்டியிருக்கோம். ரொம்ப கஷ்ஷ்...ட்ட்ட..ப்பட்டு நடிச்சு கொடுத்து இருக்காரு, கண்டிப்பா இந்த படத்துக்கு அப்புறம் அவர புடிக்காதவங்களுக்கு கூட அவர புடிக்கும்னு சொல்லிக்கிட்டே போக போன படத்துக்கும் இதே பில்டப்பு தான் கொடுத்த, பாதி படத்துலேயே ஓடி வந்தது எங்களுக்கு தானே தெரியும்னு சேனல சேஞ்ச் பண்ணா ஒரு படத்தோட ஆடியோ ரிலீஸ். மியூசிக் டைரக்டர் தம்பிய பாட சொல்லி காம்பையர் பொண்ணு வற்புறுத்த இவரு வெக்கப்பட்டுக்கிட்டே ரெண்டு லைன் பாட அதுக்கு டைரக்டர் வாவ் வாவ்னு சொல்லிட்டு அந்த பாட்ட படமாக்குன விதத்த சொல்ல ஆரம்பிச்சு, கடைசியா மியூசிக் டைரக்டர பாராட்டி முடிஞ்சதும், திரும்ப அந்த பாட்டோட டீசர் போட்டாங்க. அப்ப ஏதோ ஒரு இளையராஜா சார் சாங்க அக்கா ஹம் பண்ணிக்கிட்டே போக எங்கேயோ இடிக்குதே என யோசிச்சிட்டு இருக்கும்போதே குளிக்க எண்ணெய் எடுத்துட்டு வந்துட்டாரு அப்பா.

எண்ணெய் தேச்சுக்கிட்டே பொதிகை சேனல்க்கு வந்தேன். இவிங்க தான் இன்னும் மாறாம அப்பிடியே இருக்கானுக... நான் சிரிச்சா தீபா..வளி ஹோய்..னு  சினிமால வர தீபாவளி சாங்க்ஸ்ஸா போட்டிக்கிட்டு இருந்தாங்க. தீபாவளி என்ற வார்த்தைய தவிர அந்த பாட்டுக்கும் தீபாவளிக்கும் எந்த சம்பந்தமும் இல்ல... ஆனா போட்டானுக வேற வேல இல்லாம நானும் பாத்தேன்.

குளிச்சுட்டு வந்ததும் டி.விய போட்டா காலைலியே கோட்ட மாட்டிக்கிட்டு பஞ்சாயத்து பண்ண வந்துட்டாரு நம்ம நாட்டாம. இவரு என்னைக்கி கோட்ட கழட்டுறாரோ அன்னைக்கி தான்டா நமக்கு தீபாவளினு சொல்லிக்கிட்டே சேனல்ல மாத்துனா, பாப்பையா கோஷ்டியோட பட்டிமன்றம். முடியலனு சொல்லிக்கிட்டே அடுத்த சேனலுக்கு போனா அங்க ஐ.லியோனி பட்டிமன்றம் நடத்த சொன்னா பாலிடிக்ஸ் பேசிக்கிட்டு இருக்காரு. கடுப்பாகி திரும்ப பாப்பையாக்கே வந்துட்டேன். பாரதி பாஸ்கரும், ராஜாவும் ஒரு வழியா பேசி முடிச்சாங்க.

பாதி படத்துலேயே பஞ்சராகி, எப்படா முடிப்பீங்கனு தலைவலி தாங்காமா உக்காந்திருந்த படத்த இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக என்று நீட்டி முழங்கி டைட்டில போட்டதும், ஐயய்யோ இந்த படமானு தெரிச்சடிச்சு அடுத்த சேனலுக்கு போனா அங்க இதவிட மொக்க படத்த போட்டானுக. அதுக்கு இதுவே பெட்டர்னு இந்த சேனலுக்கு வந்தா அந்த பட ஹீரோவோட விளம்பரம், படத்துலேயே உன்ன பாக்க முடியல இதுல இங்க வேறய்யானு திட்டிக்கிட்டே சேனல மாத்துனா அங்க அண்ணனும் தம்பியும் மாறி மாறி விளம்பரத்துல வந்து செம கடுப்பேத்திட்டானுக...

போன வருசம் வடிவேலு வடிவேலுனு ஒருத்தரு, காட்டுக்குள்ள ஊருக்குள்ள அநாதை இல்லத்துலனு தீபாவளிய கொண்டாடிட்டு இருந்தாரு. பாவம் இப்போ ஆள் அட்ரஸே இல்லாம போயிட்டாரு. அந்த இடத்துல எல்லாம் இப்ப சந்தானம் நிக்கிறாரு. அதுலயும் ஒரு பொண்ணு நீங்க எப்ப ஆஸ்கர் வாங்க போறீங்கனு கேக்குது...

இப்படிதாங்க சந்தோசமா போயிட்டிருக்கு என் தீபாவளி. இதுக்காங்க பண்டிகை எல்லாம் கொண்டாடுராங்க. கடுப்பா வருதுங்க. கரெண்ட் கட் பண்ணாம இருக்கிறதுக்காக ஃபர்ஸ்ட் டைம் வருத்தப்படுறேங்க. தயவுசெஞ்சு டி.விய நிப்பாட்டிட்டு, உறவுகளோட உறவாடி பண்டிகைய கொண்டாடுங்க. மனசுல இருந்து நீங்காத தீபாவளியா இது அமைய என் நல்வாழ்த்துகள்....

நன்றிகளுடன்
யோகி